ஐரோப்பிய பயணம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

பல மறக்கமுடியாத அனுபவங்கள் கொண்டதக தனது ஐரோப்பிய பயணம் இருந்ததாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.;

Update:2025-09-20 16:32 IST

சென்னை,

ஐரோப்பிய பயணம் மேற்கொண்டது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தெரிவித்து இருப்பதாவது;

“எனது வெளிநாட்டு பயணங்கள், புதிய திட்டங்கள், அரசியல் கேள்விகள் என, மக்களுடன் ஸ்டாலின் ஆப்-ல் கேள்விகள் வந்துள்ளன. அதற்கான பதில்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

கேள்வி: வெளிநாட்டு பயண அனுபவங்கள், தொழில் முதலீட்டாளர்களிடம் தமிழ்நாடு பற்றிய பார்வை எப்படி?

பதில்: தமிழ்நாட்டில் கட்டமைப்புகளை எப்படி உருவாக்கியுள்ளோம். படித்த இளைஞர்கள் உள்ளனர். அவர்களின் திறமை என்ன என்பதை ஜெர்மனியில் முதலீட்டாளர்களை சந்தித்து விவரித்தோம். அதை கேட்ட அவர்கள், தமிழ்நாட்டை பற்றி வியந்து பேசினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த மாற்றம், வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்வதற்கான தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

கேள்வி: ஆக்ஸ்போர்டு பற்றியும், வெளிநாடு வாழ் தமிழர்களை சந்தித்தது பற்றியும் கூற முடியுமா?

பதில்: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த பேராசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் பெரியார் சிலையை திறந்துவைத்து, அவர்கள் முன் பெரியார் பற்றி பேசுகையில் மெய்சிலிர்த்தது. ஜெர்மனி, லண்டனில் தமிழர்களை சந்திக்கும்போது அவர்கள் கூறும்போது, முதல் தலைமுறை பட்டதாரிகளின் கல்வி கட்டணத்தை கலைஞர் ரத்துசெய்ததுதான் நான் இந்த அளவுக்கு இருப்பதற்கு காரணம் என்றனர். லண்டனில் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள், திராவிட மாடல் அரசு கொண்டுவந்த முழு உதவித்தொகை மூலம் இங்கே இருப்பதாக கூறினார்கள்.

இதுபோல் பல மறக்கமுடியாத அனுபவங்கள் கொண்டதக எனது ஐரோப்பிய பயணம் இருந்தது. அங்கு பொதுமக்கள் பொது இடங்களில் சுய ஒருக்கத்தை கடைபிடிப்பதை கவனித்தேன். இந்த பொறுப்புணர்வு இங்கேயும் வர வேண்டும் என விருப்பப்படுகிறேன்.”

இவ்வாறு அந்த பதிவு இருந்தது.  

Tags:    

மேலும் செய்திகள்