திருவண்ணாமலை அருகே சோழர் கால ஊற்றுக் கல்வெட்டு கண்டெடுப்பு

திருவண்ணாமலை அருகே 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால ஊற்றுக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.;

Update:2026-01-04 15:01 IST

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ச.பாலமுருகன், சி.பழனிசாமி, ம.பாரதிராஜா, ஓவியர் சிவக்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் திருவண்ணாமலை அருகே உள்ள பாவுப்பட்டு கிராமத்தில் அவ்வூரைச் சேர்ந்த லட்சுமியம்மாள் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் அங்குள்ள மலையடிவாரத்தில் ஆய்வு செய்தனர். அதில் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குலோத்துங்கச் சோழன் காலத்து கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

இந்த கல்வெட்டு 2 அடி அகலம், 6 அடி நீளம் கொண்ட பலகைக்கல்லில் வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு 3-ம் குலோத்துங்க சோழனின் 22-ம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டது. இதில் பெண்ணை வடகரை செங்குன்ற நாட்டில் காட்டாம்பூண்டி மலையடிவாரத்தில் புலவர்அடியான் ஒற்றிக்கொண்டான் திருவானை முகவன் என்பவர் அவ்விடத்தில் உள்ள நீர் ஊற்றை கண்டுபிடித்து அதற்கு சித்திரமேழி பேரூற்று என்று பெயரும் இட்டு அதை பெரிய நாட்டுக்கு தர்மமாக கொடுத்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடும் காட்டாம்பூண்டி என்ற ஊர் இந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்ட ஊருக்கு அருகில் அமைந்துள்ளது. பாவுப்பட்டு கிராமம் அக்காலத்தில் காட்டாம்பூண்டியின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. அங்கு புலவர்அடியான் ஒற்றிக்கொண்டான் திருவானை முகவன் என்பவர் அம்மலைப்பகுதியில் உள்ள இயற்கையான ஊற்றைக் கண்டுபிடித்து அதற்கு சித்திரமேழி பேரூற்று என்று பெயர் கொடுத்துள்ளார்.

சித்திரமேழி என்பது அக்காலத்தில் திருவண்ணாமலை பகுதியில் செல்வாக்காக இருந்த வேளாண் சபையாகும். அச்சபையை பெரிய நாட்டார் சபை என்றும் கூறுவார்கள். இப்பகுதி சித்திரமேழி பெரியநாட்டார் சபை ஆட்சிக்குட்பட்ட பகுதியாக விளங்குவதால் இந்த தர்மத்தை அவர்கள் பெயரில் அளித்துள்ளார். திருவானை முகவன் என்ற பெயருக்கு உரியதாக வெறையூர் அருகே திருவானை முகம் வலசை என்ற ஊர் இன்றும் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு ஊற்றுக்கு பெயரிட்டு அதற்கு கல்வெட்டு வைக்கப்பெற்றது இந்த இடத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வெட்டு அமைந்துள்ள பகுதியில் ஒரு இயற்கையான சுனை இன்றும் உள்ளது. தற்போது ஊத்துக்குட்டை என்று அழைக்கப்படுகிறது. இந்த சிறப்பு வாய்ந்த கல்வெட்டை தொல்லியல் துறை ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் கோருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்