தேயிலை தோட்டத்தில் புலி நடமாட்டம்; டிரோன் மூலம் வனத்துறை தீவிர கண்காணிப்பு

காலில் பலத்த காயம் ஏற்பட்ட புலி பொதுமக்களை பார்த்தவுடன் வேகமாக ஓடாமல் மெதுவாக நடந்து சென்று, ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டது.;

Update:2026-01-05 09:40 IST

கோப்புப்படம்

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள போர்த்தியாடா கிராமத்தில் நேற்று முன்தினம் தேயிலை தோட்டத்தில் புலி இருப்பதை கண்டு கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காலில் பலத்த காயம் ஏற்பட்ட புலி பொதுமக்களை பார்த்தவுடன் வேகமாக ஓடாமல் மெதுவாக நடந்து சென்று, ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் டிரோன் மூலம் புலியை கண்காணித்தனர்.

அப்போது அந்த புலி தேயிலை செடிகளுக்கு மத்தியில் சென்று மிகவும் சோர்வுடன் படுத்து இருந்தது. முதுமலையில் இருந்து வன கால்நடை டாக்டர் அங்கு வராததால், புலியை வனத்துறை ஊழியர்கள் கண்காணித்து வந்தனர். புலி தேயிலை தோட்டத்தில் இருப்பதை உறுதி செய்ய, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இரவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய தெர்மல் டிரோன் மூலம் வனத்துறையினர் புலி இருப்பதை உறுதி செய்து கொண்டனர்.

அதேபோல பகல் நேரங்களிலும் தேயிலை தோட்டத்தில் புலி படுத்து இருப்பதை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நேற்று காலை கண்காணித்த போது, நேற்று முன்தினம் படுத்திருந்த இடத்தில் இருந்து சற்று தூரம் நடந்து சென்று வேறு ஒரு இடத்தில் புலி படுத்திருப்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இருப்பினும், நேற்றும் தேயிலை தோட்டம் மற்றும் மலை காய்கறி தோட்டத்திற்கு பணிக்கு செல்ல வேண்டாம் என்றும், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்