சென்னையில் தண்டையார்பேட்டை, அண்ணாநகர் மண்டலங்களில் துப்புரவு பணி ஒப்பந்தம் ரத்து
பெரிய வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், மயானங்கள், பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல்கள் அதிகம் கொண்ட பகுதியாகும்.;
சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மைத்துறை சார்பில் தண்டையார்பேட்டை மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள உலகளாவிய ஒப்பந்தம் கோரப்பட்டது. இதற்கு கடந்த மாதம் 28-ந்தேதி 4 ஒப்பந்தங்கள் பெறப்பட்டன. இந்த 2 மண்டலங்களும் மக்கள் நெரிசல் மிகுந்தவை, குறுகிய தெருக்கள், பெரிய வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், மயானங்கள், பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல்கள் அதிகம் கொண்ட பகுதியாகும்.
எனவே, இங்கு வழங்கப்படும் தூய்மை சேவைகள் மிக உயர்ந்த தரத்தில் அமைய வேண்டிய தேவை உருவாகியுள்ளது.இதனால், முன்னதாக தயாரிக்கப்பட்ட டெண்டர் ஆவணம் தற்போது நிலவும் சேவைத் தேவைகளுக்கு முறையாக பொருந்தாமல் இருக்கிறது. பூங்கா பராமரிப்பு, விளையாட்டு மைதான பராமரிப்பு போன்ற முக்கிய சேவைகளும் ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தூய்மை மற்றும் கழிவு மேலாண்மை சேவையின் தரத்தை உயர்த்தும். பொதுமக்கள் எதிர்பார்க்கும் தரத்திற்கு ஏற்ப புதுப்பிக்கப்பட்ட சேவைகளுடன் புதிய டெண்டரை வெளியிடுவது மிகவும் அவசியமாகிறது. எனவே, தண்டையார்பேட்டை, அண்ணாநகர் மண்டலங்களில் கோரப்பட்ட ஒப்பந்தம் தற்போது ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.