பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானப் பணிக்கு தடை நீட்டிப்பு: ஐகோர்ட்டு
ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பு வக்கீல் கோரிக்கை விடுத்தார்;
சென்னை,
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் கட்ட தனியார் நிறுவனத்துக்கு அரசு வழங்கியுள்ள அனுமதியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் பிரஸ்னவ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சதுப்பு நிலத்தில் குடியிருப்பு வளாகம் கட்டும் பணிக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இந்தநிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, “இந்த ஐகோர்ட்டின் உத்தரவின்படி, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை செயற்கை கோள் உதவியுடன் துல்லியமாக அளவிடும் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்து விட்டது'' என்றார்.
தமிழ்நாடு சதுப்பு நில ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், “நாடு முழுவதும் உள்ள சதுப்பு நிலத்தை பாதுகாப்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் தற்போதைய எல்லையை வரையறுக்கும் பணிகள் முடிந்து, அந்த அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையை தள்ளிவைக்கவேண்டும்'' என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள், இந்த வழக்கை வருகிற 11-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர். ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பு வக்கீல் எஸ்.தமிழ்செல்வன் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று, தடையை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.