‘கூட்டணி பலமாக உள்ளது; இன்னும் யாராவது சேர்ந்தால் கூடுதல் பலம் கிடைக்கும்’ - தமிழிசை சவுந்தரராஜன்
2026-ல் தி.மு.க. இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.;
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி பலமாக உள்ளது என தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “இன்றைய கூட்டத்தில் பிரதமர் உற்சாகமாக இருந்தார், கூட்டணி தலைவர்கள் உற்சாகமாக இருந்தனர், தொண்டர்கள் உற்சாகமாக இருந்தார்கள்.
எல்லாரும் சொன்னதுபோல் இன்று காலை முதலே சூரியன் காணாமல் போய்விட்டது. கொஞ்ச நேரம் கூட எட்டிப் பார்க்கவில்லை. இதில் இருந்து இயற்கையே எங்களோடு இருக்கிறது என்பது தெளிவாகிவிட்டது. பிரதமர் மோடி சொன்னது போல் 2026-ல் தி.மு.க. இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்கனவே பலமாக உள்ளது. இன்னும் யாராவது சேர்ந்தால் கூடுதல் பலம் கிடைக்கும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.