ரூ.3.44 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் வைத்திருந்தவர் கைது

தூத்துக்குடியில் கள்ளநோட்டு தயாரித்தல், பரிமாற்றத்தில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.;

Update:2026-01-23 20:50 IST

தூத்துக்குடி மாவட்டம், புதூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதூர் பகுதியில் உள்ள முருகன் (வயது 55) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையை சோதனை செய்தனர். அதில் அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சட்ட விரோத விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து மேலும் புகையிலை பொருட்கள் குறித்து அவரது வீட்டை சோதனை செய்ததில் அங்கு சந்தேகப்படும்படி இருந்த பண்டல்களை போலீசார் சோதனை செய்தனர். அதில் மொத்தம் ரூ.3 லட்சத்து 44 ஆயிரம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டு கட்டுகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து அவரிடமிருந்து 500 ரூபாய் கள்ள நோட்டு கட்டுகள் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்சொன்ன வழக்கில் துரித விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை கைது செய்து கள்ளநோட்டுகள் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து சிறப்பாக பணியாற்றிய புதூர் காவல் நிலைய போலீசாரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்று சட்டவிரோதமாக கள்ளநோட்டு தயாரித்தல் மற்றும் கள்ளநோட்டு பரிமாற்றத்தில் ஈடுபடுவர்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்