கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
காதலர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.;
கோப்புப்படம்
சென்னையை அடுத்த உள்ளகரம் அலெக்ஸ் தெருவைச் சேர்ந்தவர் வசந்தா (40 வயது). இவர், அந்த பகுதியில் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் தமிழ்ச்செல்வி (17 வயது). தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
வசந்தா நேற்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். வீட்டின் கதவு உள்புறமாக பூட்டி இருந்தது. கதவை நீண்டநேரம் தட்டியும் மகள் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வசந்தா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது தமிழ்ச்செல்வி படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த மடிப்பாக்கம் போலீசார் தூக்கில் தொங்கிய மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் மாணவி அதே பகுதியை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. காதலர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.