மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்த குகேஷுக்கு வாழ்த்துகள்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்ற குகேஷுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update:2025-06-02 18:24 IST

கோப்புப்படம் 

நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியன் குகேஷ் (இந்தியா), 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), அர்ஜூன் எரிகைசி (இந்தியா) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும்

இந்த தொடரில் இன்று நடந்த 6-வது சுற்று ஆட்டத்தில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை இந்தியாவின் குகேஷ் எதிர்கொண்டார். பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் கார்ல்சனை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி குகேஷ் அபார வெற்றி பெற்றார். இந்த தொடரில் இரு வீரர்களும் மோதிய முதல் ஆட்டத்தில் கார்ல்சன் வெற்றிபெற்ற நிலையில் இந்த ஆட்டத்தில் குகேஷ் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் புள்ளி பட்டியலில் 8.5 புள்ளிகளுடன் குகேஷ் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேவேளை, 9.5 புள்ளிகளுடன் கார்ல்சன் 2வது இடத்தில் உள்ளார். இந்த நிலையில், மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்ற குகேஷுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் தொடரில் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்த குகேஷுக்கு வாழ்த்துகள். இந்தியாவுக்கு பெருமைமிக்க தருணம் மற்றும் குகேஷின் குறிப்பிடத்தக்க பயணத்தில் ஒரு மைல்கல். உலக சதுரங்கத்தில் இந்தியாவின் நிலையான எழுச்சியில் மற்றொரு திடமான படி. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்