கண்டெய்னர் லாரிகள் 4-வது நாளாக வேலை நிறுத்தம்: அரசுக்கு ரூ.100 கோடி வருவாய் இழப்பு
கண்டெய்னர் லாரிகள் 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்துள்ளனர்.;
கோப்புப்படம்
காசிமேடு,
சரக்கு வாகனங்களுக்கு ஆண்டு தர சான்றிதழ் பெறுவதற்கான வாகன புதுப்பிப்பு கட்டணம் 850 ரூபாயில் இருந்து, அதிகபட்சமாக 28 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. இதை கண்டித்தும், வரைமுறை இல்லாமல் போடப்படும் ஆன்லைன் வழக்குகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடந்த 9-ந் தேதி நள்ளிரவு முதல் அனைத்து கண்டெய்னர் லாரிகள், டாரஸ் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்களின் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அனைத்து துறைமுக டிரைலர் உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் நேற்று இரவு காசிமேடு ஜீரோ கேட் முன்பு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் தண்டையார்பேட்டை ஆர்.டி.ஓ. முன்னிலையில் நேற்று நடைபெறுவதாக இருந்த அனைத்து தரப்பினர் பங்கேற்கும் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இதனால் 4-வது நாளாக இன்றும் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து அனைத்து துறைமுக டிரைலர் உரிமையாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறும்போது, “உயர்த்தப்பட்ட சரக்கு வாகனங்களுக்கான வாகன தர சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணத்தை திரும்ப பெறும் வரை எங்களது போராட்டம் தொடரும். சென்னை துறைமுகத்தில் அனைத்து டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய போவதில்லை. அந்த வகையில் 5 ஆயிரம் கண்டெய்னர் லாரிகள் ஓடாது” என்றனர்.
இந்த வேலை நிறுத்தத்தால், நாள் ஒன்றுக்கு அரசுக்கு ரூ.100 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. மேலும் குளிரூட்டப்பட்ட கண்டெய்னர் லாரிகள் வாயிலாக துறைமுகத்துக்கு அனுப்பப்பட்டு கப்பல்களில் வெளியூர்களுக்கு செல்லும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருள்கள், இந்த வேலை நிறுத்தத்தால் கெட்டுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.