தொடர் மழை: பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு

தொடர் மழையால் நீர்வரத்து உயர்ந்து வருவதால் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.;

Update:2025-10-23 03:30 IST

சென்னை,

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதையொட்டி நேற்றைய நிலவரப்படி, பூண்டி நீர் பிடிப்பு பகுதிகளில் 72 மில்லி மீட்டர் என்ற அளவில் மழை பெய்தது. அதேபோல், சோழவரம் 54, பூண்டி 55, கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை 32, செம்பரம்பாக்கம் 72.4 மில்லி மீட்டர் என்ற அளவில் மழை பெய்தது.

இதன் மூலம் ஏரிகளுக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது. அதேபோல் தாமரைப்பாக்கம் 58 மில்லி மீட்டர், வீராணம் 76.4, கொரட்டூர் அணைக்கட்டு 60, நுங்கம்பாக்கம் 86.4, மீனம்பாக்கம் 52.5 மில்லி மீட்டர் என்ற அளவில் தீவிரமாக மழை பெய்தது. இந்த பலத்த மழையால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஏரிகள் நிரம்பும் நிலையை எட்டி உள்ளதால் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Advertising
Advertising

இதுகுறித்து சென்னை மண்டல நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பூண்டி ஏரிக்கு 2 ஆயிரத்து 510 கன அடி தண்ணீருடன், 400 கன அடி கிருஷ்ணா நதி நீரும் வருகிறது. இதன் மூலம் 35 அடி கொள்ளளவு கொண்ட ஏரியின் நீர் மட்டம் 33 அடியை தாண்டியது. பூண்டியில் இருந்து கொசஸ்தலையாற்றில் வினாடிக்கு 4 ஆயிரத்து 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

புழல் ஏரிக்கு வினாடிக்கு 860 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 700 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியில் 2.85 டி.எம்.சி. இருப்பு இருக்கும் நிலையில் 2,170 கனஅடி நீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் 100 கன அடியாக இருந்த உபரிநீர் திறப்பு 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஏரியில் உள்ள 5 கண் மதகுகளில் 3 ஷட்டர்கள் வழியாக உபரி நீர் அடையாறு ஆற்றில் ஆர்ப்பரித்து செல்கிறது. தொடர்ந்து மழை பெய்தால் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் உபரி நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும்.

பூண்டி, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் நிரம்புவதற்கு முன்கூட்டியே உபரிநீர் திறக்கப்படுகிறது. போதுமான இடைவெளி பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால் மிக கனமழை பெய்தாலும், வெள்ளநீர் திறப்பின் அளவு மட்டுப்படுத்தப்பட்டு அடையாறு மற்றும் கொசஸ்தலையாற்றில் பாதுகாப்பாக கடலை சென்றடையும்.

எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இருந்தாலும் கரையோர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மேடான பகுதிகளுக்கு சென்றுவிடலாம். தொடர்ந்து ஏரிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்