சிறப்பாக பணியாற்றிய டி.எஸ்.பி., 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டு

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா, திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய திருச்செந்தூர் உட்கோட்ட டி.எஸ்.பி. மகேஷ்குமாரை, தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.;

Update:2025-11-14 19:45 IST

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு, வழக்கின் விசாரணை, நீதிமன்ற பணி உட்பட அனைத்து பணிகளிலும் கடந்த 2 மாதங்களில் சிறப்பாக நடவடிக்கை மேற்கொண்டமைக்காக எட்டையபுரம், ஆத்தூர், கோவில்பட்டி மேற்கு, ஆறுமுகநேரி ஆகிய காவல் நிலையங்களை மாவட்ட எஸ்.பி. சிறந்த பணிகளின் அடிப்படையில் தேர்வு செய்தார்.

அதேபோன்று காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து சிறப்பாக செயல்பட்டதற்காக சிப்காட், விளாத்திகுளம், தாளமுத்துநகர், தூத்துக்குடி தென்பாகம் ஆகிய காவல் நிலையங்களும், அதிகமான வழக்குகளை E-filing முறையில் நீதிமன்றத்தில் கோப்புக்கு எடுக்க விரைந்து நடவடிக்கை மேற்கொண்டமைக்காக சிப்காட், முறப்பநாடு, கோவில்பட்டி மேற்கு மற்றும் திருச்செந்தூர் ஆகிய காவல் நிலையங்களும் தூத்துக்குடி மாவட்டத்திற்குள் தேர்வு செய்யப்பட்டது.

மேற்சொன்ன 10 காவல் நிலையங்களின் சிறப்பான நடவடிக்கைகளுக்காக அதன் போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கும், மேலும் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா மற்றும் திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய திருச்செந்தூர் உட்கோட்ட டி.எஸ்.பி. மகேஷ்குமார் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் நேற்று மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். 

Tags:    

மேலும் செய்திகள்