சிலிண்டர் வெடித்து விபத்து: பலூன் கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
ஆற்றுத்திருவிழாவில் பலூனுக்கு கியாஸ் நிரப்பும் சிலிண்டர் வெடித்ததில் உடல் சிதறி பெண் பலியானார்.;
திருக்கோவிலூர்,
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை ஒரு வாரமாக வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு பொங்கல் விழா, மாட்டுப்பொங்கல், காணும் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
பொங்கல் பண்டிகை முடிவடைந்த 5-வது நாளில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள தென்பெண்ணையாற்றங்கரையில் ஆண்டுதோறும் ஆற்றுத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில்களில் உள்ள உற்சவமூர்த்திகள் தென்பெண்ணையாற்றங்கரைக்கு எடுத்து வரப்பட்டு தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.
அந்த வகையில் இந்தாண்டுக்கான ஆற்றுத்திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை தென்பெண்ணையாற்றில் ஆற்றுத்திருவிழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த விழாவில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.
ஆற்றுத்திருவிழாவிற்கு வந்த சாமிகளை தரிசனம் செய்வதற்காக கள்ளக்குறிச்சி மட்டுமின்றி அருகில் உள்ள திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.
இதையொட்டி சிறுவர்கள் விளையாடி மகிழ்வதற்காக ஆங்காங்கே ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களும், தின்பண்டங்கள், பொம்மை போன்ற கடைகளும் அமைக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் மணலூர்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் அருகே வியாபாரி ஒருவர், ஹீலியம் கியாஸ் சிலிண்டர் மூலம் பலூனில் காற்று நிரப்பும் கடை அமைத்து பலூன் வியாபாரம் செய்து வந்தார்.
இந்த நிலையில் இரவு 7 மணி அளவில் 2 ஹீலியம் கியாஸ் சிலிண்டர்களில் ஒரு கியாஸ் சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. இந்த கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் திருவண்ணாமலை மாவட்டம் பாவுபட்டு கிராமத்தை சேர்ந்த பரமசிவம் மனைவி கலா (வயது 50) என்ற பெண் சிக்கி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் மணலூர்பேட்டை பள்ளிச்சந்தையை சேர்ந்த கோவிந்தசாமி மனைவி தமிழ்செல்வி (57), வேலையாப்பாக்கத்தை சேர்ந்த செல்வம் மனைவி இந்திராணி (47) மற்றும் பலூன் வியாபாரியான திருவண்ணாமலை அருகே குளத்தூரை சேர்ந்த அய்யனார் மகன் ஏழுமலை (40) உள்பட 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். அதில் சிலருக்கு கை, கால்கள் துண்டாகி சாலையில் விழுந்தன. அவர்கள் அபய குரல் எழுப்பியது காண்போர் நெஞ்சை பதை, பதைக்க செய்தது.
இதையடுத்து பலத்த காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. 6 பேர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையே விபத்து நடந்த பகுதி போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து மணலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஹீலியம் சிலிண்டர் வெடித்து பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கில் பலூன் கடை உரிமையாளர் ஏழுமலை என்பவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன்படி மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.