சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம்: சென்னையில் அமலாக்கத்துறை சோதனை

அம்பத்தூரில் உள்ள நகைக்கடைகள், வேப்பேரி உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.;

Update:2026-01-20 08:59 IST

திருவனந்தபுரம்,

கேரளா மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. உலக அளவில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தங்கம் திருடப்பட்டதாக எழுந்த புகார், பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கடந்த 2019 ஆம் ஆண்டு சபரிமலை சன்னிதானம் அருகே உள்ள துவாரபாலகர் சிலையில் இருந்த தங்கக் கவசம் பராமரிப்பு பணிக்காக எடுக்கப்பட்டது.

இதற்காக திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு அந்த கவசங்களை ஒப்படைத்தபோது அதன் எடை 42.8 கிலோவாக இருந்தது. அதை செப்பனிட்ட பிறகு, சென்னை நிறுவனத்தால் மீண்டும் ஒப்படைக்கப்பட்டபோது அதன் எடை 38.26 கிலோவாக குறைந்திருந்தது. அதாவது, 4.54 கிலோ தங்கம் மாயமாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்த முறைகேடுகளை முழுமையாக விசாரிக்க, நீதிபதிகள் ராஜா விஜயராகவன் வி. மற்றும் கே.வி. ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. தேவஸ்தானம் அதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசியல் புள்ளிகள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரிடம், சிறப்பு விசாரணைக் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில், சபரிமலை அய்யப்பன் கோவில் மூத்த தந்திரி கண்டரரு ராஜீவருவை சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தது. தங்கம் கடத்தலுக்கு தந்திரியும் உதவியாக இருந்ததும் அம்பலமானது.

இந்நிலையில், சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சென்னையில் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறது. அம்பத்தூரில் உள்ள நகைக்கடைகள், வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் அமலாக்கத்துறை இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகிறது. தமிழ்நாடு மட்டுமன்றி கேரளா மற்றும் கர்நாடகாவிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதா என்ற அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தெரிகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்