தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் - ஜி.கே.வாசன்

தூய்மைப் பணியாளர்களிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.;

Update:2025-08-06 14:55 IST

கோப்புப்படம்

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் தூய்மைப் பணியாளர்களை போராட்டக் களத்திற்கு தள்ளிய தமிழக அரசின் செயல்பாடு மனிதாபிமானமற்ற ஆட்சிக்கு எடுத்துக்காட்டாகும். தனியார் வசம் விட்டால் பாதிக்கப்படுவோம் என்றும், அரசின் நேரடி நிர்வாகத்தில் பணியாற்றவே விரும்புகிறோம் என்றும், தேர்தல் வாக்குறுதிப்படி பணிநிரந்தம் செய்ய வேண்டும் என்றும் ஏற்கனவே தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

குறிப்பாக தூய்மைப் பணியாளர்களின் பணி மிக மிக அவசியம் மட்டுமல்ல அத்தியாவசியமான அவசரப் பணியாக இருக்கிறது. சென்னை மாநகரத்தின் தூய்மைப் பணியில் ஈடுபட்டு சுத்தம் சுகாதாரத்தைப் பேணிக்காக்கக்கூடிய தூய்மைப் பணியாளர்களை அரசு முக்கியத் தேவையாக கவனத்தில் கொண்டு ஆட்சி செய்ய வேண்டும்.

ஆனால் கடந்த 6 நாட்களாக சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பொது மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். தூய்மைப் பணியாளர்கள் அவர்களின் கோரிக்கைகளை மாநகராட்சிக்கு முன்வைத்தும் அதனை கண்டுகொள்ளாமல் இருந்தது மாநகராட்சி நிர்வாகம் மட்டுமல்ல தமிழக அரசும் தான். சென்னை மாநகர தூய்மைக்கு உழைக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக ஆட்சி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்.

அதாவது சில இடங்களில் குப்பைகளை அகற்றுவதற்கும் மற்றும் பெண் தூய்மைப் பணியாளர்களை சாலைகளை சுத்தம் செய்வதற்கும் பணியை தனியார் வசம் ஒப்படைத்துவிட்டதாக கூறுகின்றனர். தூய்மைப் பணி மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தின் கீழ் பணிபுரிந்தால் பிடித்தம் போக மீதம் ரூ. 12,500 மட்டுமே மாத சம்பளமாக தனியார் மூலம் கிடைப்பது போதுமானதாக இல்லை என்கின்றனர்.

மேலும் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய நிலையில் ஊதியக்குறைப்பை ஏற்கமுடியாது என்றும் தெரிவிக்கின்றனர். இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட சுமார் 2 ஆயிரம் தூய்மைப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கும் மேல் சென்னை மாநகராட்சி முன்பு தூய்மைப் பணியாளர்கள் இரவு பகலாக தங்கியிருந்து அரசுக்கு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் சென்னை மாநகராட்சிப் பகுதி முழுவதும் ஆங்காங்கே வீடுகளில் குப்பை சேகரிக்கப்படாமல், குப்பைகள் அகற்றப்படாமல், சாலைகள் சுத்தம் செய்யப்படாமல் சுகாதார சீர்கேட்டிற்கு வழி வகுத்துள்ளது. உதாரணத்திற்கு ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில் மட்டும் 300 மெட்ரிக் டன் குப்பைகள் தேக்கமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் சென்னை எழும்பூர் பகுதிகளில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக குப்பைகள் அகற்றப்படாமல் குப்பைத் தொட்டிகள் நிரம்பி, குப்பைகள் கொட்டி, நோய் பாதிப்புகள் ஏற்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இச்சூழலிலும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் ஏற்காதது நியாயமில்லை.

எனவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களிடம் உடனடியாக தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகின்றேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Full View

Tags:    

மேலும் செய்திகள்