டிஜிட்டல் கைது மோசடி: 6 மாதங்களாக பெண்ணை மிரட்டி ரூ.31.83 கோடி பணம் பறித்த கும்பல்
மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் தங்கள் அனுமதி இல்லாமல் யாரிடமும் எதுவும் பேசக்கூடாது என்று மிரட்டியுள்ளனர்.;
பெங்களூரு,
தொழில்நுட்ப வளர்ச்சியால் நமது வாழ்வை எளிமையாக்கும் வகையில் பல்வேறு நவீன கண்டுபிடிப்புகள் நாள்தோறும் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம், தொழில்நுட்ப வளர்ச்சியை தவறான நோக்கத்துடன் பயன்படுத்தி, அப்பாவி மக்களிடம் இருந்து பணம் பறிக்கும் கும்பலும் மற்றொரு புறத்தில் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.
அந்த வகையில் மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் 'டிஜிட்டல் கைது' என்ற மோசடி வலையில் சிக்கி பலர் தங்கள் பணத்தையும், நிம்மதியையும் இழந்துள்ளனர். 'டிஜிட்டல் கைது' என்பது, மோசடி கும்பல் சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகளை போல பேசி பொதுமக்களை வீட்டில் சிறை பிடித்து பணம் பறிப்பதாகும். இதுபோன்ற டிஜிட்டல் கைது மோசடிகள் நாடு முழுவதும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் பெங்களூருவில் டிஜிட்டல் கைது மோசடி மூலம் பெண்ணிடம் 31 கோடியே 83 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த 57 வயது பெண் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அந்த பெண்ணுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி புதிய எண்ணில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசியவர்கள், அந்த பெண்ணின் பெயரில் அனுப்பப்பட்ட பார்சல் ஒன்றில் போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படுவதாகவும், உள்ளூர் காவல் நிலையத்தில் இது குறித்து எந்த தகவலும் தெரிவிக்க கூடாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும், ‘நீங்கள் எங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துவிட்டீர்கள், இனி எங்கள் அனுமதி இல்லாமல் யாரிடமும் எதுவும் பேசக்கூடாது’ என்று அவர்கள் மிரட்டியுள்ளனர்.
இருப்பினும் அந்த பெண் தனக்கு போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தொடர்பு இல்லை என்று உறுதியாக கூறியுள்ளார். இதையடுத்து, அந்த பெண்ணை வழக்கில் இருந்து விடுவிப்பதற்கான நடைமுறைகளை மேற்கொள்வதற்கு பணம் செலுத்த வேண்டும் என்று கேட்டுள்ளனர். அவர்கள் கூறியபடி, சுமார் 187 வங்கி கணக்குகளுக்கு அந்த பெண் ரூ.31.83 கோடி பணம் அனுப்பியுள்ளார். இவ்வாறு சுமார் 6 மாதங்களாக இந்த மிரட்டல் நடவடிக்கை தொடர்ந்துள்ளது.
இதனால் அந்த பெண் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்த காலகட்டத்தின்போது அவர் பணிபுரிந்த அலுவலகத்தில் அனுமதி வாங்கி வீட்டில் இருந்து வேலை செய்து வந்துள்ளார். ஒருவழியாக மார்ச் மாதத்திற்கு பிறகு மோசடி கும்பலை சேர்ந்தவர்கள், அந்த பெண்ணிடம் பணம் கேட்பதை நிறுத்தியுள்ளனர். இதன் பிறகு தனக்கு நடந்தது ஒரு மோசடி என்பது அந்த பெண்ணுக்கு தெரியவந்தாலும், ஜூன் மாதம் தனது மகனின் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததால், இது குறித்து போலீசில் புகார் அளிக்காமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில், 6 மாதங்களாக டிஜிட்டல் கைது என்ற பெயரில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பாதிக்கப்பட்ட பெண் தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் மோசடி செய்யப்பட்ட தொகை அதிகமாக இருப்பதால், இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.