திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப மை வினியோகம் தொடங்கியது
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 11 நாட்கள் மலை உச்சியில் மகா தீபம் காட்சி அளித்தது.;
திருவண்ணாமலை,
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திகழ்கிறது. கோவிலில் நடக்கும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. கோவிலில் நடந்த கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் கோவிலின் பின்பக்கம் உள்ள மலையின் உச்சியில் கடந்த டிசம்பர் மாதம் 3-ந் தேதி ஏற்றப்பட்டது.
அன்று முதல் தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் மகா தீபம் காட்சி அளித்தது. வழக்கமாக மகா தீப கொப்பறையில் இருந்து எடுக்கப்பட்ட தீப மை ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜருக்கு திலகமிடப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்படும்.
அதன்படி கடந்த 3-ந் தேதி அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சியின்போது நடராஜருக்கு தீப மை திலகமிடப்பட்டது. அதைத்தொடர்ந்து தீப மை பிரசாதம் பேக்கிங் செய்யப்பட்டு கோவிலில் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தீபத்திருவிழாவின்போது நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள் அதற்கான ரசீதுகளை காண்பித்து தீப மை பிரசாதத்தை இலவசமாகவும், மற்ற பக்தர்கள் ரூ.10 செலுத்தியும் தீப மை பிரசாதத்தை பெற்றுச் செல்கின்றனர்.