உழவர்களைக் கண்டுகொள்ளாது, "உதய" விழா கொண்டாடும் திமுக அரசு - நயினார் நாகேந்திரன் விமர்சனம்

திமுக அரசு துணை முதல்-அமைச்சரின் பிறந்த நாள் விழாவில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-11-27 15:52 IST

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் பெய்து வரும் தொடர் மழையால் விளைபயிர்கள் வீணாகி, விவசாயிகள் விழிகளில் கண்ணீர்க் குளம் பெரும் அவலம் நடைபெற்றுவருகிறது.

நாகையில் 1,000 ஏக்கர் தாளடிப் பயிர்கள், திருவாரூரில் 7,000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள், திருத்துறைப்பூண்டியில் 2,000 ஏக்கர் நெற்பயிர்கள், தூத்துக்குடியில் 50,000-க்கும் மேற்பட்ட வாழைகள், கடலூரில் 300 ஏக்கர் சம்பா பயிர்கள், சிதம்பரத்தில் 750 ஏக்கர் நெற்பயிர்கள், மயிலாடுதுறையில் 300 ஏக்கர் சம்பா பயிர்கள் என மாவட்ட வித்தியாசமின்றி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் கொத்துக் கொத்தாகப் பயிர்கள் மழை நீரில் சேதமடைந்துள்ளன.

செய்வதறியாது விவசாயிகள் தவித்து வரும் வேளையில், தக்க இழப்பீடு வழங்கி துயரைத் துடைக்க வேண்டிய திமுக அரசோ துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

உலகுக்கே அன்னமிடும் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் வேளையில், அவர்களை அலட்சியப்படுத்தி தனது கேளிக்கைக் கொண்டாட்டங்களாலும் விளம்பர மோகத்தாலும் கேக் ஊட்டிக் கொண்டாடும் திமுக அரசை விரைவில் மக்கள் தூக்கியெறிவர்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்