அறநிலையத்துறை சார்பில் 25 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்-அமைச்சர்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.79.94 கோடி மதிப்பீட்டிலான 25 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.6.77 கோடி செலவிலான 20 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.;

Update:2025-11-27 15:56 IST

இந்து சமய அறநிலையத்துறையானது தனது கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்குகள் நடத்துதல், பழமையான திருக்கோயில்களை அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து பாதுகாத்தல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், சட்டமன்ற மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

அவ்வகையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 79 கோடியே 94 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 18 திருக்கோவில்களில் மேற்கொள்ளப்படும் 24 புதிய திட்டப் பணிகள் மற்றும் ஒரு கல்லூரி உள்விளையாட்டு அரங்கம் ஆகியவற்றிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (27.11.2025) தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். மேலும், 6 கோடியே 77 இலட்சம் ரூபாய் செலவில் 5 திருக்கோயில்களில் 4 முடிவுற்ற திருப்பணிகள், கல்லூரி ஆய்வகம், செயல் அலுவலர் குடியிருப்புகள் மற்றும் 13 ஆய்வாளர் அலுவலகங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் முனைவர் துரை. இரவிச்சந்திரன், கூடுதல் ஆணையர் (திருப்பணி) பொ.ஜெயராமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்