தலைமையின் அனுமதி பெறாமல் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க வேண்டாம் - அ.தி.மு.க. உத்தரவு
கழகத் தலைமையின் அனுமதி பெறாமல், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம் என்று கழக நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க. தெரிவித்துள்ளது.;
கோப்புப்படம்
அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் காலந்தொட்டும்; நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு தொடர்ந்தும், 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக செயல்பட்டு வருகிறது என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். கழகத்தின் முக்கிய முடிவுகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்தான தகவல்களை, கழகத் தலைமை உரிய நேரத்தில், உரிய முறையில் அவ்வப்போது தெரிவிக்கும்.
ஆகவே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும்; கழகத்தின் மீது பற்று கொண்டுள்ளவர்களும், கழகத்தின் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த எவ்வித கருத்துகளையும், கழகத் தலைமையின் அனுமதி பெறாமல், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் இன்னபிற தகவல் தொடர்பு ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
கழகப் பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.