சரக்கு ரெயிலில் தீ விபத்து: 70% தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தகவல்
சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.;
சென்னை,
திருவள்ளூர் அருகே எரிபொருள் ஏற்றி சென்ற சரக்கு ரெயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்திற்கும் மேலாக கொளுந்துவிட்டு எரியும் தீயால் அப்பகுதி முழுவதுமே கரும் புகை மண்டலம் போல காட்சியளித்து வருகிறது. ரெயிலில் எரிபொருட்கள் இருப்பதால் தீ மேலும் பரவும் என அஞ்சப்படுகிறது.
தீ விபத்து காரணமாக சென்னை சென்டிரலில் இருந்து கர்நாடகா மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். தீ விபத்தை தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் இல்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
சரக்கு ரெயிலின் பெட்டி தடம் புரண்டதே தீ விபத்துக்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தீயைக் கட்டுக்குள் கொண்டுவர அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 044- 2535 4151, 044 2435 4995 ஆகிய உதவி எண்களை பயணிகள் தொடர்பு கொள்ளலாம் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், டீசல் டேங்கர் ரெயிலில் ஏற்பட்ட தீ 6 மணி நேரமாக எரிந்து வரும் நிலையில், 70% தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. 52 பெட்டிகள் கொண்ட ரெயிலில் 18 டேங்கர்கள் தீயில் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளன. டீசல் பற்றி எரிவதால் தீயை அணைக்கு பணியில் தாமதம் ஏற்படுவதாகவும் மதியம் 1 மணிக்குள்ளாக தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.