மதுரையில் இருந்து அபுதாபிக்கு விமான சேவை தொடங்கியது
விமானம் மதுரையிலிருந்து 174 பயணிகளுடன் அபுதாபிக்கு புறப்பட்டு சென்றது.;
மதுரை,
மதுரை விமான நிலையத்தில் இருந்து இலங்கை, துபாய் ஆகிய இரு வெளி நாடுகளுக்கு மட்டுமே பயணிகள் விமான சேவை இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மூன்றாவதாக மதுரையிலிருந்து அபுதாபிக்கு இண்டிகோ விமானம் தனது பயண சேவையை துவங்கியுள்ளது.
இந்த விமானம் இன்று முதல் நாளாக அபுதாபியிலிருந்து பகல் 11.30 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1.15 மணிக்கு 134 பயணிகளுடன் மதுரை வந்து சேர்ந்தது. பின்னர் மீண்டும் மதுரையிலிருந்து 174 பயணிகளுடன் நண்பகல் 2.48 மணிக்கு அபுதாபி புறப்பட்டு சென்றது. மதுரையில் இருந்து அபுதாபிக்கு திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் விமான சேவை இயக்கப்படும்.
பொதுவாக புதிய விமான சேவை துவங்கும் போது, விமான நிலையத்தில் தண்ணீர் பீய்ச்சி வரவேற்பு நிகழ்ச்சிகள் நடக்கும். ஆனால் நேற்று அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதால், வரவேற்பு மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாமல் புதிய விமான சேவை மதுரை விமான நிலையத்தில் துவங்கியது.