அரக்கோணத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயிலின் 3 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.;
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அரக்கோணம் வழியாக 27 பெட்டிகளுடன் சரக்கு ரெயில் ஒன்று, சரக்குகள் கையாளும் மேல்பாக்கம் ரெயில் நிலைய யார்டுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் எதிர்பாராத விதமாக திடீரென சரக்கு ரெயிலின் 3 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
உடனே, ஆபத்தை உணர்ந்த ரெயில் ஓட்டுநர் ரெயிலை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனடியாக இதுகுறித்து ஓட்டுநர் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு வந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ரெயில்வே பணியாளர்கள் தடம் புரண்ட பெட்டிகளின் இணைப்பை துண்டித்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சரக்கு ரெயில் தடம் புரண்டதால், சென்னை - பெங்களூரு செல்லும் ஹூப்ளி ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அரக்கோணம் - சென்னை இடையேயான மின்சார ரெயில்கள் 30 நிமிடம் காலதாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.