கொங்கு மண்டலத்தில் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றுக - வைகோ அறிக்கை

விவசாயிகள், தொழிலாளர்களை பாதுகாத்திட அரசு நல வாரியம் அமைக்க வேண்டும் என வைகோ கோரியுள்ளார்.;

Update:2026-01-21 12:35 IST

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டு உள்ள செய்தியில், கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு வளர்ப்பு கூலியாக ரூ.20 வழங்க வேண்டும். முத்தரப்பு கூட்டத்தை நடத்தி தீர்வு காண அரசு முன் வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் தொடர்ந்து கோரி வருகின்றனர்.

தேங்காய் மஞ்சி உள்ளிட்ட இடு பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில், கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு உரிய கூலியை நிறுவனங்கள் தருவதில்லை.

ஒரு கிலோ கோழி வளர்ப்பிற்கு குறைந்தபட்ச கூலியாக தற்போது ரூ.6.50 மட்டுமே கொடுக்கப்படுகிறது. மேலும் கடந்த பத்தாண்டுகளாக இந்த தொகை உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளதால் கிலோவிற்கு ரூ.20 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்களை பாதுகாத்திட அரசு நல வாரியம் அமைக்க வேண்டும்.

கோழி பண்ணைகளுக்கு காப்பீடு, இலவச மின்சாரம், வங்கிகள் மூலம் மானியம் வழங்க வேண்டும். மேலும் ஆண்டுதோறும் முத்தரப்பு கூட்டங்களை அரசு நடத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் கறிக்கோழி வளர்ப்பு என்பது விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்குகிறது.  எனவே தமிழ்நாடு அரசு இன்று நடைபெறும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்