பிரதமர் மோடி தமிழகம் வருகை; நாளைக்குள் கூட்டணியை இறுதி செய்ய பா.ஜ.க. தீவிரம்
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம் என டிடிவி தினகரன் அதிரடியாக அறிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழகத்தில் நடந்து வரும் தி.மு.க. தலைமையிலான ஆட்சியின் பதவிக்காலம் மே மாதம் 10-ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. அதனால், அதற்குள் சட்டசபை தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. அதற்காக தயாராகும் தீவிர அரசியல் பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
இதனையொட்டி, பிரதமர் மோடி நாளை மறுநாள் தமிழகம் வருகிறார். பிரதமர் மோடி வருகையால் மீனம்பாக்கம் மற்றும் கிண்டி ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலம் என அறிவிக்கப்பட்டு உள்ளன. அதனால், டிரோன் கேமராக்கள், ஆளில்லா விமானங்கள், ஹீலியம் காற்று பலூன்கள் போன்றவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் வரும் 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மிகப்பெரிய அளவில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு கூட்டணி கட்சி தலைவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றுவார்.
இதனை அடுத்து, நாளைக்குள் கூட்டணியை இறுதி செய்ய பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் மத்திய மந்திரி பியூஷ் கோயல் இன்று சென்னை வந்துள்ளார். அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. (அன்புமணி), த.மா.கா., புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. கூட்டணியில் தே.மு.தி.க., அ.ம.மு.க.வை சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மத்திய மந்திரி பியூஷ் கோயல், தே.மு.தி.க. தலைவர்களை இன்று சந்திக்க உள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது. இந்த சூழலில், அரசியல் மாற்றங்களும் நடந்துள்ளன. நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம் என டிடிவி தினகரன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இதனால், 23-ந்தேதி நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடியுடன், கூட்டணியில் இடம்பெறும் தலைவர்களையும் பங்கேற்க வைக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ப கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் தொடர்பான தீவிர பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.