தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு - பள்ளிக்கு சீல் வைப்பு
பள்ளி தாளாளர் மற்றும் 4 ஆசிரியைகளை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
மதுரை,
மதுரை கே.கே. நகர் பகுதியில் தனியார் மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமிகள் பயின்று வருகின்றனர்.
இன்று காலை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த அந்த பள்ளியில் படிக்கும் ஆருத்ரா என்கிற 4 வயது சிறுமி பள்ளி வளாகத்தில் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அதன் அருகிலேயே தண்ணீர் தொட்டி உள்ளது. போதிய பாதுகாப்பின்றி தண்ணீர் தொட்டி திறந்து இருந்ததாக கூறப்படுகிறது. ஆருத்ரா அருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார். தண்ணீரில் மூழ்கியதால் மயங்கிய நிலையில் இருந்த சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று நிலையில் சிறிது நேரத்திலேயே சிறுமி ஆருத்ரா பரிதாபமாக இறந்தார்.இது தொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி தாளாளர் திவ்யா மற்றும் 4 ஆசிரியைகளை கைது செய்து அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், இந்த சம்பவத்தில் மதுரை கோட்டாட்சியர் ஷாலினி பள்ளியில் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து தனியார் மழலையர் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்ட்டது.