சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது: போக்சோவில் சிறுவன் கைது
சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக்கூறி திருப்பூர் அழைத்து வந்தான்.;
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம் செங்கப்பம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு, பெற்றோர் இல்லை. இதனால், பாட்டி வீட்டில் வசித்து வந்தார். 10-ம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்திய அந்த சிறுமிக்கும், 18 வயது சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர், அந்த சிறுவன், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக்கூறி திருப்பூர் அழைத்து வந்தான். இங்கு வந்ததும், திருமணம் செய்து கொண்டு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்தநிலையில் சிறுமி கர்ப்பமானார்.
இதையடுத்து அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக சிறுவன் அழைத்து சென்றான். அப்போது அங்கு சிறுமி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதும், 18 வயதுக்கு உட்பட்ட சிறுமி என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அந்த சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது சிறுமிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து ஆஸ்பத்திரி டாக்டர்கள் கொடுத்த புகாரின் பேரில், திருப்பூர் கே.வி.ஆர். நகர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, 18 வயது சிறுவனை கைது செய்தனர்.