அரசு பள்ளி விழாவில் முன்னாள் அமைச்சரை புகழ்ந்து பேசிய தலைமை ஆசிரியர் பணியிட மாற்ற
கே.ஏ.செங்கோட்டையனை வெற்றி பெற இங்கே யாரும் இல்லை என்று புகழ்ந்து பேசியுள்ளார்.;
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 75 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக ஆனந்தராஜ் என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து வகுப்பறைகளுக்கு இருக்கைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டார்.
விழாவில் தலைமை ஆசிரியர் ஆனந்தராஜ் வரவேற்று பேசியுள்ளார். அவர் பேசும்போது, கே.ஏ.செங்கோட்டையன் தொடர்ந்து 40 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். அவரை வென்றிட இங்கே யாரும் இல்லை என்று புகழ்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் விழாவில் மதம் சார்ந்த பாடல்களை ஒலிபரப்பவிட்டு, மாணவர்களை திரும்ப பாடச்சொல்லி உள்ளார். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதையடுத்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுப்பாராவ் தலைமையில் அதிகாரிகள் நம்பியூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியர் ஆனந்தராஜிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரை பவானி அருகே உள்ள தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுப்பாராவ் உத்தரவிட்டார்.