குமரியில் கனமழையால் ரப்பர் தொழில் கடும் பாதிப்பு - விவசாயிகள் கவலை
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ரப்பர் விவசாய தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.;
கன்னியாகுமரி,
தமிழகத்தின் தென்கோடியில் அமைந்துள்ள குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மக்களின் முக்கிய தொழில்களில் ஒன்றாக ரப்பர் விவசாயம் அமைந்துள்ளது. மாவட்டத்தின் மலையோரப் பகுதிகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, கோதையாறு, பத்துகாணி, ஆறுகாணி ஆகிய பகுதிகள் உள்பட, மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் ரப்பர் செடிகள் பயிரிடப்பட்டு, தினசரி சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ரப்பர் விவசாய தொழிலை செய்து வருகின்றனர்.
இவர்கள் பெரும்பாலும் ரப்பர் தொழிலை மட்டுமே தங்கள் வாழ்வாதாரத்திற்காக நம்பி உள்ளனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களக குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ரப்பர் விவசாய தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை அரசு கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட ரப்பர் விவசாய தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.