தூத்துக்குடியில் பயங்கரம்: கப்பல் மாலுமி வெட்டிக்கொலை
லூர்தம்மாள்புரத்தில் பைக்கில் வேகமாக சென்ற 3 பேரை கப்பல் மாலுமி மரடோனா தட்டிகேட்டதாக தெரிகிறது.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகரில் திரேஸ்புரம், லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த சகாயகுமார் மகன் மரடோனா (வயது 30), கப்பலில் மாலுமியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். இவர் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 வாரங்களுக்கு முன்புதான் கப்பலில் இருந்து வீட்டுக்கு வந்துள்ளார்.
நேற்று மாலை தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த மதன்குமார், ரெக்ஸன் உள்பட 3 பேர் ஒரே பைக்கில் வேகமாக சென்றுள்ளனர். இதை பார்த்த மரடோனா அவர்களை கூப்பிட்டு சத்தம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மதன்குமார் உள்ளிட்டவர்கள் அரிவாளால் மரடோனாவை சரமாரியாக தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மரடோனா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலையில் உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து, மதன்குமார் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மதன்குமார் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.