மனைவிக்கு பேய் பிடித்திருப்பதாக நினைத்து சூடான மீன் குழம்பை முகத்தில் ஊற்றிய கணவர்

மாந்திரீகத்தில் ஈடுபாடு கொண்டவரான சஜீர், பேய் விரட்டுவதாக கூறி தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.;

Update:2025-10-30 15:34 IST

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சதயமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சஜீர். இவரது மனைவி ரெஜிலா(36). இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக, சஜீர் தனது மனைவி ரெஜிலாவுக்கு பேய் பிடித்திருப்பதாக நம்பி வந்துள்ளார்.

மாந்திரீகத்தில் ஈடுபாடு கொண்டவரான சஜீர், பேய் விரட்டுவதாக கூறி தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். ஏற்கனவே ரெஜிலா இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது போலீசார் சஜீரை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். ஆனால் அதன் பிறகும் சஜீர் தனது மனைவியை அடிப்பதை நிறுத்தவில்லை.

மேலும் ஊரில் உள்ள மந்திரவாதிகள் சிலரிடம் சென்று பேய் விரட்டுவதற்கான மாந்திரீக பயிற்சிகளை சஜீர் கற்று வந்துள்ளார். அந்த வகையில், ஆஞ்சல் பகுதியில் உள்ள உஸ்தாத் என்ற மந்திரவாதியை சஜீர் சந்தித்துள்ளார். அந்த மந்திரவாதி கூறியபடி ரெஜிலாவை வைத்து சில சடங்குகளை மேற்கொள்ள சஜீர் திட்டமிட்டுள்ளார்.

இதன்படி தனது மனைவி ரெஜிலாவை அழைத்த சஜீர், அவரது தலைமுடியை கலைத்துவிட்டு, உடல் முழுவதும் சாம்பலை பூசி, மாந்திரீக கயிற்றை கையில் கட்டிக் கொண்டு பேய் ஓட்டுவதற்கான சடங்குகளை செய்ய முற்பட்டுள்ளார். ஆனால் இதற்கு ரெஜிலா மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த சஜீர், வீட்டின் சமையலறையில் இருந்த சூடான மீன் குழம்பை எடுத்து வந்து ரெஜிலாவின் முகத்தில் ஊற்றியுள்ளார்.

இதையடுத்து வலியால் ரெஜிலா கதறிய சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதற்குள் சஜீர் அங்கிருந்து தப்பியோடினார். பின்னர் ரெஜிலா மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரெஜிலாவுக்கு ஒரு மகன் உள்ள நிலையில், அந்த சிறுவனையும் சஜீர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள சஜீரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்