திருச்சி விமான நிலைய ஓடுதளத்தில் புதிய வகை ஒளிரும் விளக்குகள் அமைப்பு

திருச்சி சர்வதேச விமான நிலையம் அதிகபடியான பயணிகளை கையாண்டு வருகிறது.;

Update:2025-12-18 11:13 IST

திருச்சி,

திருச்சி விமான நிலையத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டதை தொடர்ந்து நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையை அடுத்து திருச்சி சர்வதேச விமான நிலையம் அதிகபடியான பயணிகளை கையாண்டு வருகிறது.

குறிப்பாக அபுதாபி, பக்ரைன், துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கு விமான பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் சர்வதேசதரத்தில் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தற்போது ஓடுதளத்தில் அதிநவீன ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பனி, மழை காலங்களில் ஓடுதளம் விமானிகளுக்கு தெளிவாக தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருச்சி விமான நிலைய இயக்குனர் கூறும்போது, இந்த விளக்கு ஓடுதள எல்லை முடிவை விமானிகளுக்கு தெரியப்படுத்த உதவுகிறது. வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுர (ஏர்ட்ராபிக்கன்ட்ரோல்டவர்) உதவியுடன் இந்த விளக்குகள் பனி மூட்டம் காணப்படும் போதும், இயற்கை சீற்றங்கள் ஏற்படும்போதும் பத்திரமாக விமானத்தை இயக்க உதவும். இரண்டு ஜோடிகளாக பொறுத்தப்பட்டுள்ள இந்த விளக்குகள் (டேக்ஸி வே) விமான ஓடுதள பாதையை இணைக்கும் பாதைகளில் 5 இடங்களில் நிறுவப்பட்டுள்ளது என்றார்.

இதேபோல் திருச்சி விமான நிலையத்தில் ஊழியர்களின் அடையாள அட்டையை சோதிக்கும் பணியினை மேற்கொள்வதற்காக புதிய தானியங்கி பணியாறளர் வருகை பதிவு எந்திரம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது. இதனை விமான நிலைய இயக்குனர் ராஜு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் திலீப் நம்பூதிரி, துணை பொது மேலாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்