பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2.62 கோடி வருமானம்

பழனி முருகன் கோவிலில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.;

Update:2025-12-18 12:04 IST

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு சாமி தரிசனம் செய்ய வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து தினமும் திரளான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் கோவிலில் தரிசனம் முடித்த பின்பு, அங்குள்ள உண்டியல்களில் பணம், நகை, நவதானியங்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன், அதிலுள்ள பணம், பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணி அளவிடப்படுகிறது.

அதன்படி கடந்த மாதம் 20-ந்தேதி பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. ஒரு மாதத்துக்கு பிறகு பழனி கோவிலில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில், துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்கள், வங்கி அலுவலர்கள் கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

முன்னதாக உண்டியல்கள் திறக்கப்பட்டு அதிலுள்ள பணம், தங்கம், வெள்ளி நகைகள் காணிக்கை எண்ணும் பணி நடக்கும் கார்த்திகை மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை தனித்தனியாக பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதன் மூலம் ரூ.2 கோடியே 62 லட்சத்து 18 ஆயிரத்து 509-ம், தங்கம் 631 கிராம், வெள்ளி 9,006 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 312-ம் கிடைத்தன.

Tags:    

மேலும் செய்திகள்