3 ஆண்டுகளில் 155 செயற்கைகோள்களை விண்ணில் ஏவ திட்டம்; இஸ்ரோ தலைவர்
இன்னும் 3 ஆண்டுகளில் 155 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.;
குலசேகரம்,
இஸ்ரோ தலைவர் நாராயணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
1984-ல் இந்தியரான ராகேஷ் சர்மா ரஷியா மூலம் விண்வெளிக்கு சென்றார். அதன் மூலம் நமக்கு நிறைய நன்மைகள் கிடைத்தன. நமது இந்திய மண்ணில் இருந்து ஒரு விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்பினால் நிறைய அனுபவங்கள் கிடைக்கும் என்ற அடிப்படையில் சுபான்ஷூ சுக்லாவை முதலில் அமெரிக்காவில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியுள்ளோம்.அவர் வந்த பிறகு அவருக்கு கிடைத்த அனுபவங்கள் நமக்கு பெரும் உதவியாக இருக்கும். 2040-ல் நிலவில் இந்தியர்கள் தரையிறங்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அங்குள்ள கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது:
2035-ல் விண்வெளியில் நாம் சொந்தமாக விண்வெளி நிலையம் அமைக்க உள்ளோம். 2040-ல் இந்தியரை நமது ராக்கெட் மூலம் சந்திரனுக்கு அனுப்பி, திரும்பி கொண்டு வர வேண்டும் என்று நமது பிரதமர் கூறியுள்ளார். இதற்காக 40 மாடி உயரமுள்ள ஒரு ராக்கெட்டை உருவாக்கும் பணி நடந்து வருகிறது. 2600 டன் எடையுள்ள அந்த ராக்கெட், 75 ஆயிரம் கிலோ எடையை சுமந்து மேலே செல்லும். இன்னும் 3 ஆண்டுகளில் 155 செயற்கைகோள்களை விண்ணில் ஏவ திட்டங்கள் உள்ளன. எனவே எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை நீங்கள் எதிர்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.