தி.மு.க அரசு, மக்களைத் தேடி சிகிச்சை அளிக்கப் போவதாக அறிவித்திருப்பது வேடிக்கையானது - டி.டி.வி.தினகரன்

வரும் சட்டமன்றத்தேர்தலில் தி.மு.க-வுக்கு வரலாற்றுத் தோல்வியைப் மக்கள் பரிசாக வழங்கப்போவது உறுதி என்பதை பதிவு செய்கிறேன் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.;

Update:2025-08-01 13:12 IST

கோப்புப்படம்

சென்னை,

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

தமிழக அரசின் சுகாதாரத்துறையின் மூலம் "நலம் காக்கும் ஸ்டாலின்" எனும் பெயரில் மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை தொடங்கி வைக்க இருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு, தூய்மைப் பணியாளர்களே சிகிச்சை அளிக்கும் அவலம் என அலங்கோல நிலையில் காட்சியளிக்கும் அரசு மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்தவோ, நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சையை வழங்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, மாநிலம் முழுவதும் யாரை வைத்து இந்த மருத்துவ முகாம்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது? என்ற கேள்வி இந்நேரத்தில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 என விதவிதமான பெயர்களில் விளம்பரத்திற்காக ஏற்கனவே தொடங்கப்பட்ட திட்டங்களே முறையாகச் செயல்படுத்த முடியாமல் முடங்கியிருக்கும் நிலையில், தற்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில், நலம் காக்கும் ஸ்டாலின் எனும் புதிய திட்டத்தைத் தொடங்குவது முழுக்க முழுக்க மக்களை ஏமாற்றும் செயலாகும்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக உங்கள் தொகுதியில் ஸ்டாலினாக இருந்த திட்டம், ஆட்சிக்கு வந்த பின்பு உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சராக மாறி, தற்போது ஆட்சி நிறைவடையும் தறுவாயில் உங்களுடன் ஸ்டாலின் என உருமாறியிருக்கிறதே தவிர, அதனால் மக்களுக்கு எந்தவித பயனும் ஏற்படவில்லை.

தேர்தல் பிரச்சாரத்தின் போது ஊர் ஊராகச் சென்று 100 நாட்களில் தீர்க்கப்படும் எனப் பெட்டி பெட்டியாக மக்களிடம் வாங்கிய மனுக்களின் தற்போதைய நிலை என்ன? என்பதே தெரியாத நிலையில், அடுத்தடுத்து பெயரளவில் தொடங்கப்படும் திட்டங்கள், மக்களைத் திசைதிருப்பும் நோக்கில் திமுக நடத்தும் தேர்தல் நாடகங்களில் ஒன்றாகவே பார்க்க வேண்டியுள்ளது.

உதாரணத்திற்கு,

+ நான் முதல்வன் திட்டம்

+இல்லம் தேடிக் கல்வி

+ புதுமைப்பெண் திட்டம்

+ நீங்கள் நலமா?

+ பசுமைத் தமிழ்நாடு திட்டம்

+வாழ்ந்து காட்டுவோம் திட்டம்

+நடமாடும் பெண்கள் கழிப்பறை (She Toilet)

* முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டம்

என அடுக்கிக் கொண்டே போகும் அளவிற்கு முதல்-அமைச்சர் அவர்களால் பெயரளவிலும் விளம்பரத்திற்காகவும் மட்டுமே தொடங்கிவைக்கப்பட்ட திட்டங்களின் பட்டியல் நீள்கிறதே தவிர, அவற்றால் குறிப்பிடத்தக்க மாணவர்களும், மக்களும் பயனடைந்ததாக இதுவரை எந்தவித தரவுகளும் இல்லை.

நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் என ஏற்கனவே தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்களுக்கு புதிய ஸ்டிக்கரை ஒட்டி மீண்டும் மீண்டும் தொடங்கி வைப்பதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் முதல்-அமைச்சர் அவர்கள், அந்த திட்டத்தின் நோக்கம் முழுமையாக மக்களைச் சென்றடைகிறதா? அதன் மூலம் மக்கள் பயனடைகின்றனரா? என்பதைக் கண்காணிக்கத் தவறிவிட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்திலிருந்தபடி தமிழக அரசின் ஒட்டுமொத்த மக்கள் நலத் திட்டங்களையும் ஒரே டேஸ்போர்டு மூலம் கண்காணிப்பதாக அவ்வப்போது செய்திக்குறிப்புகளையும், வீடியோ காட்சிகளையும் வெளியிடுவதில் தி.மு.க அரசு செலுத்திய கவனத்தை, அத்திட்டங்களை முறையாகச் செயல்படுத்துவதிலும், மக்களுக்கு ஏற்ற வகையில் நடைமுறைப் படுத்துவதிலும் செலுத்தவில்லை என்பதற்கு மக்கள் படும் இன்னல்களே சாட்சியாக அமைந்துள்ளன.

எனவே, மக்கள் நலனை மறந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அடுத்து வரும் தேர்தலை மட்டுமே கருத்தில் கொண்டு விளம்பரத்திற்காகவும், வாக்கு அரசியலுக்காகவும் தொடங்கி வைக்கும் எந்தவித திட்டங்களும் இனி மக்கள் மத்தியில் எடுபடாது என்பதோடு. கடந்த நான்கரை ஆண்டுகளாக மக்கள் அனுபவித்து வரும் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் வரும் சட்டமன்றத்தேர்தலில் திமுகவுக்கு வரலாற்றுத் தோல்வியைப் பரிசாக வழங்கப்போவது உறுதி என்பதை இந்நேரத்தில் பதிவு செய்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்