வரலாறு காணாத உச்சத்தில் மல்லிகைப்பூ விலை.! கிலோ ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை

நிலக்கோட்டை மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ விலை ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.;

Update:2026-01-10 12:49 IST

திருப்பூர்,

கடும் பனிப்பொழிவு மற்றும் வரத்து குறைவு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மல்லிகைப்பூ வரத்து குறைந்துள்ளது. தற்போது மார்கழி மாதம் என்பதால் மக்கள் பலர் மாலை அணிவதாலும், சில நாட்களில் பொங்கல் திருநாள் வரவிருப்பதாலும் பூக்களின் தேவை அதிகமாகி உள்ளது. இதனால் மல்லிகைப்பூ விலை வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.

குறிப்பாக, நிலக்கோட்டை மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ விலை ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. போதிய பூக்கள் கிடைக்காததால், ஏராளமான வெளிநாட்டு ஆர்டர்கள் ரத்தானதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஒரு கிலோ மல்லிகைப்பூ விலை ரூ.9 ஆயிரத்துக்கும், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மலர் சந்தையில் ரூ.8 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதுரை மாட்டுத்தாவணியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு  500 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப்பூ தற்பொழுது 6000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திருப்பூர் பூ மார்க்கெட்டிற்கு, சேலம், தர்மபுரி மற்றும் திருப்பூரின் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பல்வேறு பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது பனிப் பொழிவு அதிகரித்து காணப்படுவதால் பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பூ மார்க்கெட்டுக்கு பூக்களின் வரத்து குறைந்தே காணப்படுகிறது.

இதனால் பூக்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் கிலோ ரூ.3 ஆயிரம் வரை விற்கப்பட்டது. ஆனால் தற்போது ரூ.7 ஆயிரத்திற்கும் அதிகமாக விற்பனையானது. பூ மார்க்கெட்டில் விற்கப்பட்ட பூக்களின் விலை (1 கிலோவிற்கு) பின்வருமாறு:-

ரூ.100-க்கு விற்கப்பட்ட செவ்வந்தி ரூ.120-க்கும், சம்பங்கி ரூ.60-க்கும், ரூ.800-க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ ரூ.1,000-க்கும், ரூ.1400-க்கு விற்கப்பட்ட முல்லைப்பூ ரூ.1400-க்கும், அரளி பூ ரூ.160-க்கும், ரோஜா ரூ.240-க்கும், கனகாம்பரம் ரூ.800-க்கும், காக்கடா பூ ரூ.600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மவுசு குறையாத மல்லிகையின் விலையால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனால் பூக்களின் விலை மேலும் உயருமோ என்ற அச்சத்தில் அனைத்து தரப்பினரும் உள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்