கலைஞரின் கனவு இல்லம்: ஒரு லட்சமாவது பயனாளிக்கு வீட்டிற்கான சாவியினை வழங்கினார் மு.க.ஸ்டாலின்
2024-25 ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்ட ஒரு லட்சம் வீடுகளும் ரூ.3500 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (29.10.2025) தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில், “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் ஒரு லட்சமாவது பயனாளியான தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், இலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மு.சுமதியிடம் வீட்டிற்கான சாவியினை வழங்கினார்.
“கலைஞரின் கனவு இல்லம்” திட்டம்
நாட்டிலேயே முதன்முறையாக ஊரகப் பகுதிகளில் ஏழைக் குடும்பங்கள் வசிக்கும் குடிசைகளுக்குப் மாற்றாக நிரந்தர வீடுகள் கட்டித்தரும் முன்னோடித் திட்டம் கலைஞரால் 1975 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 2010 ஆம் ஆண்டு குடிசையில்லா மாநிலம் என்ற இலக்கை எய்திடும் வகையில் ‘கலைஞர் வீடு வழங்கும் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் தமிழ்நாட்டில் கிராமப்புற பகுதிகளில் ஏறத்தாழ 8 லட்சம் குடிசை வீடுகள் உள்ளதாக கண்டறியப்பட்டதன் அடிப்படையில் 'குடிசையில்லா தமிழ்நாடு" என்ற இலக்கினை அடையும் பொருட்டு, எதிர்வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் ஊரகப் பகுதிகளில் 6 வருடங்களில் 8 லட்சம் வீடுகள் புதியதாக கட்டித்தர தமிழ்நாடு அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
நிலையான கான்கிரீட் மேற்கூரையுடன் கூடிய சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவுடன் வாழும் ஊரக ஏழைக் குடும்பங்களின் கனவினை நிறைவேற்றும் வண்ணம் இத்திட்டம் அறிவிக்கப்பட்ட 2024-25 ஆம் ஆண்டிலேயே ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசால் அனுமதி வழங்கப்பட்டது.
கணக்கெடுப்பின் மூலம் ஏற்கனவே கண்டறியப்பட்ட பயனாளிகளின் தகுதித்தன்மையை உறுதி செய்து அப்பயனாளிகளுக்கு இத்திட்டதின் கீழ் வேலை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர மேற்கண்ட கணக்கெடுப்பில் இடம் பெற்று வீடு கட்டுவதற்கு நிலம் இல்லாத பயனாளிகளுக்கு பட்டா வழங்கியும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்கியும் வீடற்ற, நிலமற்ற பயனாளிகளின் கனவை இத்திட்டம் நிறைவேற்றியுள்ளது.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கான நோக்கம் மற்றும் திட்டத்தின் பயன்கள் விரைந்து மக்களை சென்றடையும் பொருட்டு “பயனாளிகள் தேர்வு செய்தல் முதல் தொகை விடுவித்தல்” வரையிலான அனைத்து நடைமுறைகளும் இணையம் வழியாக மேற்கொள்ளப்பட்டதால் தகுதியான பயனாளிகள் வீட்டினை விரைந்து கட்டி முடித்திட சாத்தியமானது. தமிழ்நாடு அரசு இதற்காக முனைப்புடன் செயல்பட்டதால் இத்திட்டம் பொது மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதனால் 2024-25 ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்ட ஒரு லட்சம் வீடுகளும் ரூ.3500 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மாவட்ட வாரியாக 2024-25-ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் விவரம்
1 அரியலூர் 3491
2 செங்கல்பட்டு 3990
3 கோயம்புத்தூர் 1428
4 கடலூர் 3500
5 தருமபுரி 3985
6 திண்டுக்கல் 6125
7 ஈரோடு 3940
8 கள்ளக்குறிச்சி 2965
9 காஞ்சிபுரம் 2855
10 கன்னியாகுமரி 1790
11 கரூர் 742
12 கிருஷ்ணகிரி 3443
13 மதுரை 3468
14 மயிலாடுதுறை 2498
15 நாகப்பட்டினம் 2500
16 நாமக்கல் 5800
17 பெரம்பலூர் 1200
18 புதுக்கோட்டை 3250
19 ராமநாதபுரம் 2400
20 ராணிப்பேட்டை 3000
21 சேலம் 3500
22 சிவகங்கை 741
23 தென்காசி 424
24 தஞ்சாவூர் 3000
25 நீலகிரி 1297
26 தேனி 961
27 தூத்துக்குடி 1673
28 திருச்சிராப்பள்ளி 4000
29 திருநெல்வேலி 717
30 திருப்பத்தூர் 3000
31 திருப்பூர் 1411
32 திருவள்ளுர் 4000
33 திருவண்ணாமலை 3114
34 திருவாரூர் 2570
35 வேலூர் 2711
36 விழுப்புரம் 3500
37 விருதுநகர் 1011
மொத்தம் 1,00,000
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்ட ஓராண்டிற்குள்ளேயே ஒரு லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் பொருட்டு இன்றையதினம் தென்காசியில் நடைபெற்ற அரசின் விழாவில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் ஒரு லட்சமாவது பயனாளியான தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், இலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மு.சுமதியிடம் வீட்டிற்கான சாவியினை வழங்கினார்.
இதேபோன்று, 2025-26-ஆம் ஆண்டில், மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு, இதுநாள் வரை 16,245 வீடுகள் உடனடியாக முடிவுறும் நிலையிலும், 83,755 வீடுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திலும் இருந்து வருகின்றன. இவை அனைத்தும் 2025-26 ஆம் நிதியாண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும்.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், பால்வளத் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ராபர்ட் புரூஸ், ராணி ஸ்ரீகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜா, அப்துல் வஹாப், சதன் திருமலைக்குமார், பழனி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் பா. பொன்னையா தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், சார் ஆட்சியர் வைஷ்ணவி பால், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கபட்டுள்ளது.