கரூர் கூட்ட நெரிசல்... சிறப்பு புலனாய்வுக்குழுவில் 2 பெண் எஸ்.பி.க்கள்

கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த இடத்திற்கு சிறப்பு புலனாய்வு குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.;

Update:2025-10-04 08:48 IST

சென்னை,

கரூர் மாவட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தநிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ போன்ற நிகழ்வுகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக்கோரி தினேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில் குமார், “த.வெ.க.வின் செயலை நீதிமன்றம் கடுமையாக கண்டிக்கிறது. என்ன மாதிரியான கட்சி இது? கரூர் துயரத்துக்கு த.வெ.க. வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. இது அக்கட்சி தலைவரின் மனநிலையை காட்டுகிறது. அரசியல் கட்சிக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச சமூக பொறுப்பை கூட த.வெ.க. பின்பற்றவில்லை” என்று கடுமையாக விமர்சித்தார்.

இதையடுத்து கரூரில் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஐ.ஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழுவை நியமித்து உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் ஆவணங்களை சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் உடனே ஒப்படைக்க கரூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில், சிறப்பு புலனாய்வு குழுவினர் கரூர் சம்பவம் தொடர்பாக இன்று விசாரணையை தொடங்க உள்ளனர்.

இதன்படி கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த இடத்திற்கு சிறப்பு புலனாய்வு குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளனர். இந்த சிறப்பு புலனாய்வு குழுவில் சியாமளா தேவி, விமலா ஆகிய 2 பெண் எஸ்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் 3 ஏ.டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் இந்த குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கரூர் போலீசாரிடம் உள்ள கோப்புகளை சிறப்பு புலனாய்வு குழுவினர் இன்று பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்