குலசை தசரா திருவிழா: பாதுகாப்பு பணியில் 4,000 போலீசார்

குலசை தசரா திருவிழா நாளை மறுதினம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.;

Update:2025-09-21 07:24 IST

தூத்துக்குடி,

இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூர் தசரா திருவிழாவிற்கு அடுத்த படியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் நடைபெறும் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த விழாவில் பல்வேறு நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு செல்வார்கள்.

இந்த ஆண்டிற்கான குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெரும் திருவிழா நாளை மறுதினம் (23-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசுர சூரசம்ஹாரம் விழா அக்டோபர் 2-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறுகிறது. இந்த தசரா திருவிழாவில் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

மேலும், பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற தசரா திருவிழாவை முன்னிட்டு 60 நாள், 41 நாள், 21 நாள், 11 நாள், 6 நாள் என மாலை அணிந்து விரதம் தொடங்கி வருகின்றனர்.காளி, சிவன், பார்வதி, பிரம்மா, விஷ்ணு, விநாயகர், முருகன், குறவன், குறத்தி, குரங்கு, கரடி, நர்சு, போலீஸ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வேடங்கள் அணிந்து ஊரூராகச் சென்று, அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து, கோவிலில் உண்டியலில் செலுத்துவது தான் இதன் சிறப்பு ஆகும்.

இந்நிலையில் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்வது தொடா்பான அரசுத் துறை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கோட்டாட்சியா் கவுதம் தலைமையில் நடந்த கூட்டத்தில், திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ்குமாா், வட்டாட்சியா் பாலசுந்தரம், இன்ஸ்பெக்டா் பிரபு பாஸ்கரன், குலசை கோயில் செயல் அலுவலா் வள்ளிநாயகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பக்தா்களின் வசதிக்காக 25 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் பந்தல்கள், 280 கழிப்பிடங்கள், தற்காலிக பேருந்து நிறுத்தம், 6 இடங்களில் வாகன நிறுத்தங்கள், தரிசனத்துக்கு கூடுதல் வரிசைப் பாதை, 64 கண்காணிப்பு கேமராக்கள், 24 மணி நேர மருத்துவ வசதி, தயாா் நிலையில் தீயணைப்பு வாகனம், 200-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள், கொடியேற்ற நாளில் 1000 போலீசாரும், அக். 1, 2ஆம் தேதிகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவாா்கள் என்பது உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்