தலைவர்கள் குறித்த நேரத்தில் வரவேண்டும் - உதயநிதி
பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு எப்போதும் துணை நிற்கும் என உதயநிதி தெரிவித்தார்;
சென்னை,
கரூரில் நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் இரவு 7 மணிக்குமேல் பிரசாரம் நடைபெற்றது. பிரசாரத்தின்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள், 12 ஆண்கள் என மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர். இது தமிழகத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில், கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது,
முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 39 பேர் உயிரிழந்த துயரத்தை தாங்க முடியவில்லை. 3 மாவட்ட ஆட்சியர்கள் மீட்பு நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு எப்போதும் துணை நிற்கும்.
கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டியது த.வெ.க.வினரின் கடமை. கட்டுக்கடங்காத கூட்டம் வரும்போது தலைவர்கள் குறித்த நேரத்தில் வரவேண்டும் என்றார்.