அறத்தைப் போற்றி, தர்மத்தை நிலைநாட்டிட உறுதியேற்போம் - எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.;
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-
காக்கும் கடவுளாம் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த இத்திருநாளை 'கிருஷ்ண ஜெயந்தி" என்றும்; 'கோகுலாஷ்டமி' என்றும் உள்ளம் மகிழ்ந்து கொண்டாடும் இந்த நன்னாளில், மக்கள் அனைவருக்கும் எனது இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
கிருஷ்ணர் அவதரித்த இந்த இனிய நாளில், குழந்தைகளை கிருஷ்ண பகவான் போல் அலங்கரித்தும், அவர்களின் பிஞ்சு பாதங்களை மாவில் நனைத்து, கால் தடங்களை வீட்டு வாசலில் இருந்து வரிசையாகப் பதிய வைத்தும், பார்ப்பவர்களின் கண்களுக்கு அந்தக் குழந்தை கிருஷ்ணனே, கிருஷ்ண ஜெயந்தி அன்று ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் கால் தடம் பதித்து நடந்து வந்தது போலத் தெரியும் வண்ணம் அலங்காரம் செய்து, கோலமிட்டு, பலகாரங்கள், பால், தயிர், வெண்ணெய், பழவகைகளைப் படைத்து இறைவனை வழிபட்டு மகிழ்ச்சி அடைவார்கள்.
செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் இறைவனிடம் அர்ப்பணம் செய்துவிட்டு, சர்வ வல்லமை பொருந்திய எல்லாவற்றிற்கும் ஆதாரமான, இறைவன் திருவடியை சரணடைபவர், பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுதலை பெறுவர் என்கிறது கண்ணன் அருளிய கீதை.
'குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் தவிர்த்து, தெளிந்த நீரைப்போல் மனதை நிலைநிறுத்தி, பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்தால், ஒருவர் எடுத்த காரியத்தில் வெற்றி பெற்று எல்லா சுகங்களும், மன நிம்மதியும் கிடைக்கப் பெற்றவராய் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடலாம்' என்கிற கிருஷ்ண பகவானின் கீத உபதேசத்தை நாளும் மனதில்கொண்டு, கிருஷ்ண பகவான் அவதரித்த இத்திருநாளில், ஒவ்வொருவரும் அறத்தைப் போற்றி, தர்மத்தை நிலைநாட்டிட உறுதியேற்போம் எனக் கூறி, அனைவருக்கும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது நல்வழியில் எனது உளமார்ந்த 'கிருஷ்ண ஜெயந்தி' வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.