இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த லாட்ஜ் ஊழியர் கைது
இளம்பெண் குளிக்கும்போது ஜன்னல் வழியாக வீடியோ எடுத்துள்ளார்.;
கோப்புப்படம்
கேரள மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னை சென்டிரல் பகுதியில் உள்ள பிரபல லாட்ஜ் ஒன்றில் சமீபத்தில் அறை எடுத்து தங்கினார். சென்னையை அடுத்த பெரியபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் அந்த லாட்ஜில் வேலை செய்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தனஞ்செய்பதி (19 வயது) என்ற ஊழியர், இளம்பெண் குளிக்கும்போது ஜன்னல் வழியாக வீடியோ எடுத்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனடியாக கூச்சல் போட்டார். பின்னர் ஆடைகளை அணிந்து கொண்டு வெளியில் வந்த அவர், தனஞ்செய்பதியின் செல்போனை பிடுங்கி ஆய்வு செய்துள்ளார்.
ஆனால் தனஞ்செய்பதி அதற்குள்ளாக அவர் குளிக்கும்போது எடுத்த வீடியோவை அகற்றிவிட்டதாக தெரிகிறது. இருந்தாலும் அவரது செல்போனில் வேறு சில பெண்கள் குளிக்கும்போது எடுத்த காட்சிகள் பதிவாகி இருந்தன. அதன் அடிப்படையில், வேப்பேரி அனைத்து மகளிர் போலீசில் தனஞ்செய்பதி மீது புகார் மனு கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனஞ்செய்பதியை கைது செய்தனர்.