மீனாட்சி அம்மன் கோவில் வழக்கில் அறநிலையத்துறை பதிலை ஏற்க ஐகோர்ட்டு மறுப்பு
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்து தொடர்பான அனைத்து தகவல்களையும் புள்ளி விவரங்களுடன் கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.;
சேலம் மாவட்டத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், ஐகோர்ட்டு மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகளை முறையாக பராமரிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள சொத்துகளை முறையாக பராமரித்து பாதுகாக்கவும், மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை விரைவாக நடத்தவும் உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டது.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் புனரமைப்பு பணிகள் நடக்கின்றன. இந்த கோவிலுக்கு சொந்தமானதும், உபகோவில்களின் சொத்துகளின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான சொத்துகள், உபகோவில்களின் சொத்துகள் எவ்வளவு ஆக்கிரமிப்பில் உள்ளன என்பது பற்றி எந்த விவரமும் பதில் மனுவில் இல்லை. அறநிலையத்துறையின் இந்த பதில் மனுவை ஏற்க இயலாது என அதிருப்தி தெரிவித்தனர்.
விசாரணை முடிவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமாக எவ்வளவு சொத்துகள் உள்ளன? இதன் உபகோவில்கள் எங்கெல்லாம் உள்ளன? அவற்றுக்கு எத்தனை இடங்களில் நிலங்கள் உள்ளிட்ட சொத்துகள் இருக்கின்றன? இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் எவ்வளவு? இந்த சொத்துகளில் இருந்து குத்தகை வருமானம் எவ்வளவு நிலுவையில் உள்ளது? எந்தெந்த சொத்துகள் எல்லாம் ஆக்கிரமிப்பில் இருக்கின்றன? அவற்றை மீட்க எடுத்த நடவடிக்கை என்ன? என்பன உள்பட அனைத்து தகவல்களையும் புள்ளி விவரங்களுடன் இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். சொத்துகள் தொடர்பான அசல் ஆவணங்களையும் அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் மாதம் 7-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.