மருதமலை: 184 அடி உயர முருகன் சிலை அமைக்கும் பணியை மேற்கொள்ளக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு
தடையில்லா சான்று பெற இதுவரை கோவில் நிர்வாகம் விண்ணப்பம் செய்யவில்லை என்று வனத்துறை கூறியிருந்தது.;
கோப்புப்படம்
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், வன விலங்கு ஆர்வலர் எஸ்.முரளிதரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘மருதமலை முருகன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 184 அடி உயரத்துக்கு முருகன் சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முறையான அனுமதி எதுவும் பெறவில்லை. அதனால், வனப்பகுதியில் முருகன் சிலை அமைக்க தடை விதிக்கவேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை ஐகோர்ட்டு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ‘‘184 அடி உயர முருகன் சிலை அமைக்க மலை பகுதி பாதுகாப்பு ஆணையத்திடம் தடையில்லா சான்று பெற இதுவரை மருதமலை கோவில் நிர்வாகம் விண்ணப்பம் செய்யவில்லை'' என்று வனத்துறை கூறியிருந்தது.
இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ‘‘மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மருதமலை முருகன் கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இந்த கோவிலில் பாம்பாட்டி சித்தர் வழிப்பட்டுள்ளார். இந்த கோவிலில் நன்கொடையாளர்கள் மூலம் 184 அடி உயர முருகன் சிலை, ரூ.110 கோடி செலவில் அமைப்பது என்று தீர்மானம் இயற்றப்பட்டது. இந்த தொகையில் சிலை மட்டுமல்லாமல், வாகன நிறுத்தம், அருங்காட்சியகம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் பக்தர்களுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதலில் தேர்வு செய்த இடம் போலம்பட்டி வனப்பகுதியில் இருந்து 55 மீட்டர் தூரத்தில் உள்ளதால், தற்போது போலம்பட்டி வனப்பகுதியில் இருந்து 137 மீட்டர் தூரத்தில் முருகன் சிலையை அமைக்க முடிவு செய்துள்ளோம். இது யானை வழித்தடங்களிலும் வராது. மேலும், வன விலங்குகளுக்கும், பக்தர்களுக்கும் பாதிப்பு ஏற்படாது'' என்று கூறப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வனப்பகுதியில் இருந்து 137 மீட்டர் என்பது மிக அருகில் உள்ள இடமாகும். இதனால், வனத்துக்கும், வன விலங்குகளுக்கும், பக்தர்களுக்கும் கடும் பாதிப்பு ஏற்படும்'' என்றனர்.
பின்னர் நீதிபதிகள் கூறுகையில், “மலேசியாவில் இதுபோல மிகப்பெரிய முருகன் சிலை அமைக்கப்பட்டாலும், அங்கு விதிகளை தீவிரமாக பின்பற்றுவார்கள். அதுபோல நாம் எதிர்பார்க்க முடியாது. மருதமலை முருகன் கோவிலில் மிகப்பெரிய சிலை அமைப்பதற்கு முன்பு, நாள் ஒன்றுக்கு எத்தனை பக்தர்கள் வருவார்கள்? அவர்கள் வரும் வாகனங்களை எங்கு நிறுத்துவார்கள்? அதற்கு போதிய இடவசதி உள்ளதா? கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எங்கு அமைப்பீர்கள்? போன்ற அடிப்படை விஷயங்கள் குறித்து ஆய்வுகளை செய்யவேண்டும்.
அதுமட்டுமல்ல, பெரிய கோவில்களில் நாள் ஒன்றுக்கு அதிகளவில் குப்பை கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. இதற்கெல்லாம் சேர்த்து முருகன் சிலை அமைக்க சுமார் 100 ஏக்கர் நிலம் தேவைப்படும். வனப்பகுதிக்கு அருகில் சிறிய இடத்தில் சிலை அமைத்தால், பக்தர்கள் அதிகளவில் வந்து கூட்ட நெரிசல் ஏற்பட்டு, அசம்பாவிதம் சம்பவம் நடந்து விடக்கூடாது. மனிதர்கள்-வனவிலங்குகள் மோதல் சம்பவமும் நடந்து விடக்கூடாது.
முதலில் சிலை அமைக்க தகுந்த இடத்தை தேர்வு செய்யவேண்டும். பக்தர்களும், வாகனங்களும் எளிதில் வந்து செல்ல நல்ல அகலமான பாதை வேண்டும். இந்த திட்டத்தினால் எந்த வகையிலும் வனப்பகுதிக்கு பாதிப்பு வரக்கூடாது. எனவே, இதுபோன்ற அடிப்படை ஆய்வுகளை மேற்கொள்ளும் வரை 184 அடி உயர முருகன் சிலை அமைக்கும் பணி எதையும் மேற்கொள்ளக்கூடாது” என்று அவர்கள் கூறினர்.
பின்னர், முருகன் சிலை அமைக்கும் திட்டம் குறித்து நிபுணர்களை அமைத்து ஆய்வுகள் செய்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். அதுவரை சிலை அமைக்கும் பணியை மேற்கொள்ளக்கூடாது என்று உத்தரவிட்டு, விசாரணையை வருகிற டிசம்பர் 5-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.