மெரினா கடற்கரையில் தூங்கிய ஆட்டோ டிரைவருக்கு நேர்ந்த கதி: கல்லூரி மாணவர் வெறிச்செயல்

சென்னை மெரினா கடற்கரையில் கள்ளக்காதல் விவகாரத்தால் ஆட்டோ டிரைவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கல்லூரி மாணவர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update:2025-11-08 09:15 IST

சென்னை:

சென்னை கீழ்ப்பாக்கம் சாஸ்திரிநகர் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி (வயது 33). அவர் ஆட்டோ ஓட்டி வந்தார். திருமணம் ஆன இவர் மனைவியும் ஒரு குழந்தையும் உடையவர். நேற்று முன்தினம் இரவு, அந்தோணி மது போதையில் ஆட்டோவை ஓட்டிச் சென்றதாக தெரிகிறது. வள்ளூவர் கோட்டம் அருகே போக்குவரத்து போலீசார் அவரை மடக்கி சோதனை செய்ததில், அவர் மது அருந்தியிருந்தது உறுதியானது. இதையடுத்து, போலீசார் அவரது ஆட்டோவை பறிமுதல் செய்து, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதனால் வேறொரு ஆட்டோவில் ஏறி அந்தோணி மெரினா நொச்சிக்குப்பம் பகுதிக்கு சென்றார். அங்கு தனது தோழியை சந்தித்து, ரூ.10 ஆயிரம் பணம் கேட்டார். தோழி, “காலையில் பணத்தை தருகிறேன்” என்று கூறியதாகத் தெரிகிறது.

அபராதத் தொகையை கட்டி ஆட்டோவை மீட்டுக்கொள்வதற்காக காலையில் பணம் வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன், அந்தோணி இரவில் நொச்சிக்குப்பம் கடற்கரையில் மணலில் படுத்து தூங்கினார்.அப்போது மர்ம நபர்கள் சிலர் அவரைத் தலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். கடுமையாக காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அவருடைய அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் உடனடியாக மெரினா போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் போலீஸ் படையுடன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். உயிருக்கு போராடிய அந்தோணியை ஆம்புலன்சில் ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அந்தோணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக மெரினா போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அந்தோணியை அரிவாளால் தாக்கியவர்கள் யார், ஏன் தாக்கினர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முன்னாள் தகவல்களின் அடிப்படையில், அந்தோணியை தாக்கியவர்கள் சென்னையில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் பயிலும் மாணவரும் அவரது நண்பர்களும் என கூறப்படுகிறது. அந்தோணி கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்ததாகவும், அதனைச் சுற்றிய தகராறே இந்தக் கொலையின் காரணமாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். கல்லூரி மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்