ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டி தொடக்க விழா: இந்திய வீரர்களை கவுரவித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் நடைபெறும் 14-வது இளையோர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் 24 நாடுகளை சேர்ந்த இளம் ஹாக்கி அணிகள் பங்கேற்று உள்ளனர்.;

Update:2025-11-29 10:49 IST

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டின் வீரர்கள் பிற நாடுகளுக்கு சென்று சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வெல்ல செய்வதோடு நிற்காமல், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கு பெறும் வகையில் சென்னையில் ஆசிய, சர்வதேச அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகளை தொடர்ந்து நடத்தி, சென்னையை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாகவும், உலகின் முக்கிய நகரமாகவும் உருவாக்கி வருகின்றார்.

அதன் அடிப்படையில் மாமல்லபுரத்தில் 186 நாடுகளைச் சார்ந்த சதுரங்க விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, உலகமே சென்னையின் அழகை கண்டுகளித்த சென்னை பார்முலா 4 இரவு நேர சாலை கார் பந்தையம், சென்னை ஓபன் (WTA) சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2022 போட்டி, ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2023 போட்டி, 7ஆவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி (ஆடவர்) சென்னை 2023 போட்டி, 2023-ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச அளவிலான உலக சர்ஃபிங் லீக் போட்டி, HCL சைக்ளோத்தான் (CYCLOTHON) போட்டி, ஏடிபி சேலஞ்சர் 100 சர்வதேச ஆண்கள் டென்னிஸ் போட்டி, சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2025 என பல்வேறு சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் 14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டி, தமிழ்நாட்டில் சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கம் மற்றும் மதுரையில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஹாக்கி விளையாட்டரங்கம் ஆகிய இரு இடங்களிலும் 28.11.2025 தொடங்கி 10.12.2025 வரை சிறப்பாக நடைபெற உள்ளது.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5.11.2025 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அறிமுகப்படுத்திய 14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டிக்கான வெற்றிக் கோப்பை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பயணம் மேற்கொண்டதுடன், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் பயணத்தை தொடர்ந்து சென்னை வந்தடைந்தது.

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 10.11.2025 அன்று சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டியின் ”காங்கேயன்” சின்னத்தினை அறிமுகப்படுத்தினார்.

இளையோர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் 24 நாடுகளை சேர்ந்த இளம் ஹாக்கி அணிகள் பங்கேற்று உள்ளனர்.

28.11.2025 அன்று சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில் 14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டியின் தொடக்கவிழாவில் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்ல காரணமான மற்றும் கலந்து கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹாக்கி வீரர்கள் உள்ளிட்ட இந்திய அணியின் மூத்த வீரர்கள் பத்மஸ்ரீ விருது பெற்ற வி.பாஸ்கரன், அர்ஜுனா விருது பெற்ற முகமது ரியாஸ், அர்ஜுனா விருது பெற்ற வி.ஜே.பிலிப்ஸ், எஸ்.திருமால்வளவன், சார்லஸ் கோர்னீலியஸ், பி.பி.கோவிந்தா, முனீர் சேட் உள்ளிட்ட மூத்த வீரர்களை சிறப்பித்து ”காளையன்” நினைவு பரிசினை வழங்கினார்.

முன்னதாக தொடக்க விழாவினை முன்னிட்டு, கண்கவர் வாணவேடிக்கை மற்றும் மின்விளக்குகளின் வண்ண ஜாலத்துடன் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்தியா-சிலி நாடுகளுக்கிடையே நடைபெற்ற போட்டியை தொடங்கி வைத்து, இரு நாட்டு வீரர்களுக்கும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பீகார் மாநில ஊரக வளர்ச்சித் துறை மந்திரி சர்வண்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், மருத்துவர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஆர்.டி.சேகர், இ.பரந்தாமன், ஆர்.மூர்த்தி, அ.வெற்றி அழகன், ஜே.ஜே.எபினேசர், தமிழரசி ரவிக்குமார், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, சர்வதேச ஹாக்கி சம்மேளனத் தலைவர் டத்தோ தயாப் இக்ரம், இந்திய ஹாக்கி சங்கத் தலைவர் திலீப் திர்கி, செயலாளர் போலாநாத் சிங், பொருளாளர் சேகர் ஜெ.மனோகரன், இயக்குநர் (பொது) கமாண்டர் ஆர்.கே.ஸ்ரீவத்சவா, பல்வேறு நாடுகளின் ஹாக்கி சங்க நிர்வாகிகள், ஹாக்கி விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்