4 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு பணிநியமன ஆணைகள் - அமைச்சர் சி.வி.கணேசன் வழங்கினார்

போட்டித் தேர்வுகளுக்கான 55 இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு அதில் 3,523 போட்டித் தேர்வர்கள் பயனடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-12-10 15:03 IST

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தொகுதி-II போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 4 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் இன்று பணிநியமன ஆணைகளை வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழ்நாடு முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின் படி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, இளைஞர்களுக்கு பயன்பெறும் வகையில் தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சிகள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை செயல்படுத்தி வருகிறது.

2,764 தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு 3,16,916 மாணவர்கள் மற்றும் வேலைநாடுநர்கள் பயன் அடைந்துள்ளனர். தொழில்நெறி வழிகாட்டுதல் வழங்கப்படுவதுடன், தொழில்நெறி கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்குகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் மூலம் நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளுக்கான 342 இலவச பயிற்சி வகுப்புகளில் 17,220 போட்டித் தேர்வர்கள் பங்குபெற்று 1,145 தேர்வர்கள் பல்வேறு அரசு மற்றும் பொது துறை நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். மேலும், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் போட்டித் தேர்வுகளுக்கான 55 இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு, 3,523 போட்டித் தேர்வர்கள் பயன் அடைந்துள்ளனர். மெய்நிகர் கற்றல் தளம் மற்றும் கல்வித் தொலைக்காட்சியின் மூலம் பயிற்சி உள்ளடக்கங்கள் வழங்கப்படுகின்றன.

மேலும், கடந்த 5 ஆண்டுகளில் மாவட்டங்கள் தோறும் சிறிய மற்றும் பெரிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 2,84,754 வேலைநாடுநர்கள் (4,919 மாற்றுத்திறனாளிகள் உட்பட) பல்வேறு தனியார் துறை நிறுவனங்களில் பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம் மூலம் இந்நிதியாண்டில் ரூ.5.10 கோடி செலவினம் மேற்கொள்ளப்பட்டு 14,297 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்