எந்த ஷா வந்தாலென்ன..? எத்தனை திட்டம் போட்டாலென்ன...? - மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு
தேர்தல் பணிகளை திமுக தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.;
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஒரு சில மாதங்கள் மட்டும் இருக்கும் நிலையில் திமுக தேர்தல் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, அவ்வப்போது எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், மாவட்ட செயலாளர்கள் கூட்டங்களை நடத்தி தேர்தல் தொடர்பான பணிகள் மூடுக்கி விடப்பட்டுள்ளன.
அந்த வகையில், ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்ற பரப்புரையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை மயிலாப்பூர் தொகுதியில் நடந்த வாக்குச்சாவடி கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இந்த வாக்குச்சாவடிக்கு 440 வாக்குகளை இலக்காக நிர்ணயித்து, ஒவ்வொரு வாக்குச்சாவடி உறுப்பினருக்கும் அவரவருக்கான இலக்கை நிர்ணயித்துக் கொடுத்தார்.
இக்கூட்டத்தில் நிர்வாகிகள், பூத் கமிட்டியினர், சார்பு அணியினர் கலந்து கொண்டு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள 440 வாக்குகளைப் பெறுவதற்கான வியூகத்தை விவாதித்து அதனை படிவத்தில் குறித்து தலைமைக் கழகத்தில் சமர்ப்பித்தனர்.
இந்த நிலையில், இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
“எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன?. டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும். தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்” என்று தெரிவித்துள்ளார்.