கல்லூரிகளில் நிறுவன மேலாண்மைக்குழு அமைக்கும் திட்டம் - அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார்
படிப்படியாக அனைத்துக் கல்லூரிகளிலும் நிறுவன மேலாண்மைக்குழு உருவாக்கப்படும் என கோவி.செழியன் தெரிவித்தார்.;
சென்னை,
மாணவர்கள் புத்தக அறிவுடன் மட்டுமல்லாமல் தொழில்நுட்ப அறிவுடன், சமூக உணர்வு, பண்பாடு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை கற்றறிய கல்லூரி தோறும் நிறுவன மேலாண்மைக்குழுவினை (Institute Management committee) அமைத்திட ஏதுவாக இன்று (24.09.2025) சென்னை, பாரதி மகளிர் கல்லூரியில் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து இந்த விழாவில் அவர் பேசியதாவது;-
“முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்கல்வித் துறைக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். அதில் ஒன்றுதான் இன்று தொடங்கப்பட்டிருக்கும் நிறுவன மேலாண்மைக்குழு (Institute Management committee). கல்லூரியைச் சுற்றியுள்ள தொழில்துறை சார்ந்தவர் மற்றும் மாணவர்களின் பெற்றோர் ஆகியோரை உள்ளடக்கிய நிறுவன மேலாண்மைக்குழு ஒவ்வொரு கல்லூரிகளிலும் அமைக்க சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
வடசென்னை பகுதியில் உள்ள ஏழை, எளிய பொருளாராத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த மாணவியர் கல்வி வளர்ச்சி பெறவேண்டும் என்ற நோக்கத்திற்காக தொடங்கப்பட்டு 58 ஆண்டுகளாக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது இந்த கல்லூரி. முதல்-அமைச்சரால் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் மாபெரும் வெற்றித் திட்டமான “புதுமைப்பெண்” திட்டம் இக்கல்லூரியில் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் இவ்வாண்டு வரை இக்கல்லூரியில் 1,734 மாணவியர் பயன்பெற்றிருப்பது பாராட்டுதலுக்குரியது. நம் முதல்-அமைச்சரின் சிறப்புத் திட்டங்களில் ஒன்றான “நான் முதல்வன்” திட்டத்தின் மூலமாக இக்கல்லூரியில் 13,526 மாணவியர் இதுவரை பயனடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு கல்லூரி முதன்மை வளாகத்தில் இருந்த பழைய கட்டடத்தை மாற்றி 60 அறைகள் கொண்ட அழகான பிரம்மாண்டமான கலைஞர் நூற்றாண்டு கட்டிடம் என்ற புதிய கட்டிடம் துணை முதல்-அமைச்சரால் மாணவியரின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
ஒரு கல்வி நிறுவனத்தின் வலிமை, அதன் கட்டிடங்களில் மட்டுமல்லாமல் மாணாக்கர்களின் கனவுகளை உயர்த்தும் கல்வித் தரத்திலும், நல்ல நிர்வாகத்திலும் உள்ளது. மாணவர்கள் சமூகத்துடன் ஏற்படுத்தும் நெருக்கத்தின் மூலமாகவே இது நிரூபிக்கப்படுகிறது. இன்றைய தலைமுறையினர், அறிவியல், தொழில்நுட்பம், தொழில் முனைவுத்திறன் ஆகிய துறைகளில் தங்களைத் தானே மேம்படுத்திக் கொண்டு, உலகளாவிய போட்டியில் சிறந்து திகழ வேண்டும்.
அதற்கு கல்வி நிறுவனங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் புத்தக அறிவுடன் மட்டும் இல்லாமல், தொழில்நுட்ப அறிவு, சமூக உணர்வு, பண்பாடு மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும். உலகம் விரைவாக முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையில், நம் மாணவர்களும் உலகளாவிய போட்டியில் முன்னிலை வகிக்க வேண்டும் என்பதே கல்வி நிறுவனங்களின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும்.
இவற்றை கருத்தில் கொண்டு தான் கல்லூரியைச் சுற்றியுள்ள தொழில்துறை சார்ந்தவர் மற்றும் மாணவர்களின் பெற்றோர் ஆகியோரை உள்ளடக்கிய நிறுவன மேலாண்மைக்குழு ஒவ்வொரு கல்லூரிகளிலும் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அரசு கல்லூரிகளில் அருகில் உள்ள தொழில் நிறுவனங்களோடு (Industries) இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்து உருவாக்கப்பட்டதே நிறுவன மேலாண்மைக் குழுவாகும். மேலாண்மை குழுவின் பங்கு, மாணவர்களுக்கு கல்வியை மட்டும் அளிப்பதல்ல; அவர்களின் திறன்களைக் கண்டறிந்து வளர்ப்பதிலும், சமூகத்திற்கு பொறுப்புணர்ச்சியுள்ள குடிமக்களை உருவாக்குவதிலும் செயலாற்ற வேண்டியது அவசியம்.
இன்று நடைபெறும் நிறுவன மேலாண்மை குழு தொடக்க விழா மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சரின் தலைமையிலான அரசின் உயர்கல்வித்துறையில் ஒரு புதிய அத்தியாயமாகும். இன்றைக்கு சுமார் 125 கல்லூரிகளில் இக்குழுவானது தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டுக்கழக பயிற்சி வழிகாட்டு மையத்தின் வழிகாட்டுதலோடு உருவாக்கப்பட உள்ளது. படிப்படியாக அனைத்துக் கல்லூரிகளிலும் இது உருவாக்கப்படும்.
புதிய மேலாண்மை குழு, மாணவர்களின் திறன்களை மேம்படுத்தி, சமூகத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் என நான் நம்புகிறேன். உங்கள் வாழ்க்கையை மாற்றிக் காட்டும் சக்தி கல்வியில்தான் இருக்கிறது. உழைப்பும் ஒழுக்கமும் இருந்தால் எந்த உயரத்தையும் எட்ட முடியும். மேலாண்மை குழுவின் வழிகாட்டுதலுடனும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்புடனும், நீங்கள் அனைவரும் நாட்டின் பெருமைமிக்க குடிமக்களாக உருவாக என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலன், வளர்ச்சி மற்றும் அவர்களுடைய எதிர்கால உயர்வுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் முதல்-அமைச்சருக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டின் மீது ஆர்வமும், விளையாட்டுத் துறையில் சாதிக்கவும் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கி இளைய சமுதாயம் சாதனை படைக்க வழிகாட்டியிருக்கும் துணை முதல்-அமைச்சருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.