‘தமிழகத்தை மீட்டெடுக்க நர்மதையின் மைந்தன் மோடி வந்துள்ளார்’ - நயினார் நாகேந்திரன்

பிரதமர் மோடி சென்னை வருகை தரும்போது சூரியன் மறைந்து போனது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-23 16:06 IST

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரளாவில் இருந்து புறப்பட்டு, மதியம் 2.40 மணியளவில் பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தார்.

விமான நிலையத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், டி.ஜி.பி. வெங்கட்ராமன், அமைச்சர் தா.மோ.அன்பரசன், பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. தலைவர்கள் ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர். அவர்களது வரவேற்பை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மதுராந்தகம் வந்தடைந்தார்.

மதுராந்தகம் ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, துணை பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமைச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர் தங்கமணி பா.ஜ.க. மற்றும் என்.டி.ஏ. கூட்டணி கட்சி தலைவர்கள், பிரதமரை வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து பொதுக்கூட்ட மேடைக்கு பிரதமர் மோடி வந்து சேர்ந்தார். இந்த கூட்டத்தின் தொடக்கத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது;-

“தமிழகத்தை மீட்டெடுக்க நர்மதையின் மைந்தன் மோடி வந்துள்ளார். இது பொதுக்கூட்டம் அல்ல, இது ஒரு மாநாடு. மதுராந்தகத்தில் நடக்கும் கூட்டத்தால் சென்னை சட்டமன்றத்தில் இன்று பெரிய பதற்றம். பல செடிகளில் பூத்த மணம் வீசுகின்ற மலர்கள் மாலையாகி இறைவனிடத்தில் சேரும். அதே போல் மணம் வீசும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் இன்று ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.

இந்த மாநாட்டை வானமே வாழ்த்திக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தரும்போது சூரியன் மறைந்து போனது. நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படப்போவது உறுதி. அதற்கான வேலைகளை பிரதமர் மோடியும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற முடியவில்லை, சனாதன தர்மத்தை அழிப்போம் என்று சொல்கிறார்கள். உதயநிதி ஸ்டாலினை முதல்-அமைச்சராக்க வேண்டும் என்பதுதான் அவர்கள் நோக்கம். மக்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை.

மக்கள் மீது அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி. தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரிகள், 11 வந்தே பாரத் ரெயில்கள், கடந்த 11 ஆண்டு காலத்தில் 14 லட்சம் கோடி ரூபாய் நிதியை பிரதமர் மோடி தந்துள்ளார்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்